இந்தியா

குடும்ப அரசியலில் காங்கிரஸ்: மோடி தாக்கு

தினமணி

ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு, காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயாரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவருமான சோனியா காந்தி ஆகியோரை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை மோடி தெரிவித்துள்ளார்.
 சத்தீஸ்கர் சட்டப் பேரவைக்கான 2ஆம் கட்ட தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 நாட்டின் நலனுக்காகவே வாழ்வது அல்லது சாவதை தீர்மானமாக கொண்ட தலைமை, காங்கிரஸýக்கு இதுவரை கிடைக்கவில்லை. ராகுல் காந்தியை தலைமையாக கொண்டு செயல்படும் காங்கிரஸ் கட்சி மட்டும் சத்தீஸ்கரில் ஆட்சியில் இருந்தால், இப்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சியை மாநிலம் சந்திக்க 50 ஆண்டுகள் பிடித்திருக்கும்.
 இதற்கு காரணம் உள்ளது. அவர்களின் (காங்கிரஸ்) அரசியல் ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கி, அதே குடும்பத்துடன் முடிந்துவிடும். ஆனால் பாஜகவின் அரசியலோ, ஏழைகளின் குடிசைகளில் இருந்து தொடங்குகிறது.பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த விவரத்தை ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் கேட்கின்றனர்.
 பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால்தான், போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன. இதனால்தான் அவர்கள் (ராகுல், சோனியா காந்தி) நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால், ஜாமீன் கோரினோம் என்பதை ஏன் அவர்கள் மறந்தனர்? ஆதலால் நிதி மோசடி விவகாரத்தில் ஜாமீனில் வெளியே இருக்கும் அவர்களிடம் இருந்து எனக்கு நற்சான்றிதழ் தேவையில்லை (நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் ஜாமீன் பெற்றிருப்பதை குறிப்பிட்டார்).
 மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1985ஆம் ஆண்டு பேசியபோது, அரசால் ஒதுக்கப்படும் ரூ.1 நிதியில் பொது மக்களுக்கு 15 காசுகள்தான் செல்கிறது என்று தெரிவித்திருந்தார். அப்படியெனில், எஞ்சிய 85 காசுகள் நிதியை எந்த கை (காங்கிரஸின் தேர்தல் சின்னம் கை ) மோசடி செய்தது? பணமதிப்பிழப்பு நடவடிக்கையினாலேயே, ஊழல் காரணமாக அரசு நிதியில் இருந்து மாயமான 85 காசுகள் திரும்பி கொண்டு வரப்பட்டது.
 வளர்ச்சி பணிகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கும்? என்று என்னிடம் மக்கள் கேட்கின்றனர். அரசிடம் அதிக அளவில் நிதி உள்ளது. அந்த நிதியானது, பொது மக்களுக்கு சொந்தமானது. இதற்கு முன்பு, அந்த நிதியானது, சிலரின் படுக்கை விரிப்புகளுக்கு கீழும், சுவர்களின் பின்னாடியும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு, அந்த பணம் அனைத்தும் வெளியே வந்துவிட்டது.
 மக்களின் விருப்பங்களுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொடர்பு இல்லை. அக்கட்சியினர் கோஷங்களை எழுப்புவர்; ஆனால் அவர்களிடம் கொள்கைகளோ, விருப்பத்தை நிறைவேற்றும் உறுதியோ கிடையாது. சத்தீஸ்கர் தேர்தலுக்காக 36 அம்ச தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் ராகுல் காந்தியை, 150 முறை "சார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்து சத்தீஸ்கரை விட ராகுல் காந்திதான் காங்கிரஸýக்கு மிகவும் முக்கியம் என்பது தெரிகிறது.
 நாட்டின் வளர்ச்சியில் பாஜக உறுதிபூண்டுள்ளது. இதனால்தான் தேர்தல்களில் பாஜகவுடன் எப்படி போட்டியிடுவது என்று எதிர்க்கட்சியினரால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை என்று மோடி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT