இந்தியா

சபரிமலை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்

DIN

சபரிமலை விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு கேரள மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.
 சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
 இந்த தீர்ப்பை அமல்படுத்த முயலும் கேரள அரசை எதிர்த்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஹிந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஐயப்பன் கோயில் நடை கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி திறக்கப்பட்டது.
 கோயிலுக்கு வந்த 50 வயதுக்குள்பட்ட பெண்களை பாதி வழியிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்.
 பக்தர்களின் போராட்டம் காரணமாக, நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் பதற்றம் நிலவியது. அதன் பிறகு, சிறப்பு பூஜைக்காக, ஐயப்பன் கோயில் நடை கடந்த 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் திறக்கப்பட்டது. அப்போதும் சபரிமலையில் பெண்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. இந்தச் சூழலில், மண்டல பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை இந்த வாரம் திறக்கப்படவுள்ளது.
 எனினும், ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதி ஏற்பாடுகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இந்த முறையும் சபரிமலைக்கு வருவதற்கு பல பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
 கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது ஆகியவை குறித்து விவாதிப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ கே.முரளிதரன் கடந்த 2 தினங்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தார்.
 இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தேவஸ்வம் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:
 சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
 இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்.
 மண்டல பூஜைக்கான யாத்திரை தொடங்குவதற்கு முன்பாகவே பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT