இந்தியா

ரஃபேல் விலை விவரம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு: சீலிட்ட உறையில் வழங்கியது மத்திய அரசு

DIN

பிரான்ஸிடம் 36 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் விலை விவரங்களை, மூடிய உறையில் வைத்து சீலிட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை சமர்ப்பித்தது.
 காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரஃபேல் ஒப்பந்தம் தாமதப்படுத்தப்பட்டதாலேயே, தற்போதைய நிபந்தனைகளின் கீழ் ரஃபேல் விமானங்களை வாங்கும் நிலை ஏற்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
 ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. விமானக் கொள்முதல் விலை விவரங்களை பொதுவில் வெளியிட அக்கட்சி வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு அந்த விலை விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
 ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்குரைஞர்கள் மனோகர் லால் சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் செüரி, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 அந்த மனுக்களை கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், 36 ரஃபேல் விமானங்களின் விலை விவரங்களை, மூடிய உறையில் வைத்து சீலிட்டு 10 நாள்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.
 அப்போது மத்திய அரசு சார்பில் வாதாடிய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், "ரஃபேல் விமானங்களில் விலை விவரங்கள் நாடாளுமன்றத்தில் கூட பகிர்ந்துகொள்ளப்படவில்லை' என்று கூறி, நீதிமன்றத்தில் அந்த விவரங்களை சமர்ப்பிக்க தயக்கம் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் அமர்வு, விமானங்களின் விலை விவரங்களை நீதிமன்றத்துடன் பகிர்ந்து கொள்ள இயலாத பட்சத்தில், அதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கு விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது.
 இந்நிலையில், மத்திய அரசு ரஃபேல் விமானங்களின் விலை விவரங்களை மூடிய உறையில் வைத்து சீலிட்டு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதிலுள்ள தகவல்களை நீதிபதிகள் அமர்வு வரும் 14-ஆம் தேதி விசாரணையின்போது கவனத்தில் கொள்ளும் எனத் தெரிகிறது.
 ஆவணங்கள் சமர்ப்பிப்பு: இதனிடையே, கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி விசாரணையின்போது, ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது தொடர்பான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 அதனடிப்படையில், 14 பக்க ஆவணம் ஒன்றை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது.
 "36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதென முடிவெடுக்கப்பட்டது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள்' என்ற தலைப்பிலான அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருந்ததாவது:
 ரஃபேல் ஒப்பந்தங்கள் கொள்முதலுக்கான நடவடிக்கையில், "பாதுகாப்புத் தளவாட கொள்முதல் நடைமுறைகள்-2013' முறையாக, முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. அதற்காக பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சிலிடமும் ஒப்புதல் பெறப்பட்டது,
 அந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட "இந்திய பேச்சுவார்த்தைக் குழு', ஓராண்டு காலத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தியது.
 விமானங்களின் விலை, அவற்றை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான கால அவகாசம், பராமரிப்பு நிபந்தனைகளில் இந்திய பேச்சுவார்த்தைக் குழு சாதகமான முடிவைப் பெற்றது. டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தோடு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துடன் (காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில்) ஒப்பிடுகையில் லாபகரமானதாகவும், சிறப்பானதாகவும் இருந்தது.
 அதன் பிறகு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிடம் ரஃபேல் ஒப்பந்தத்துக்கு 2016 ஆகஸ்ட் 24-ஆம் தேதி அனுமதி பெறப்பட்டது. பின்னர் இந்திய-பிரான்ஸ் அரசுகளின் பாதுகாப்பு அமைச்சகங்கள் இடையே 2016 செப்டம்பர் 23-ஆம் தேதி ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
 பாதுகாப்புத் துறை விதிகளின்படி, ரஃபேல் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான நடவடிக்கையில் தனது கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கு முழு சுதந்திரம் உள்ளது.
 108 ரஃபேல் விமானங்களை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கும், இந்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கும் (ஹெச்ஏஎல்) இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
 டஸால்ட் நிறுவனத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் ரஃபேல் விமானங்களை தயாரிப்பதற்கு ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு 2.7 மடங்கு அதிக கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது.
 முந்தைய ரஃபேல் கொள்முதல் ஒப்பந்த கோரிக்கையின்படி, டஸால்ட் நிறுவனமானது 18 விமானங்களை பிரான்ஸிலும், 108 விமானங்களை இந்தியாவிலுமாக 126 விமானங்களை தயாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் 108 விமானங்களை தயாரிப்பது தொடர்பாக ஹெச்ஏஎல் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படவில்லை. இதனால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
 நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ரஃபேல் ஒப்பந்தம் தோல்வியடைந்ததால், இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் எதிரி நாடுகள் 4 மற்றும் 5-ஆம் தலைமுறை நவீன போர் விமானங்களை 400-க்கும் அதிகமாக வாங்கிவிட்டன. எனவே நாமும் போர் விமானங்களை அவசரமாக வாங்க வேண்டிய தேவை எழுந்ததால், புதிய ஒப்பந்தத்தில் விமானங்களை பிரான்ஸிலேயே தயாரிக்கும் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அந்த ஆவணத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
 இந்திய விமானப் படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், 36 ரஃபேல் போர் விமானங்களை ரூ.58,000 கோடி மதிப்பில் வாங்குவதற்காக, பிரான்ஸýடன் இந்தியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இரு என்ஜின்களுடன் பல்வேறு முறைகளில் பயன்படுத்தக் கூடிய வகையிலான ரஃபேல் விமானங்களை பிரான்ûஸச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT