ராஜஸ்தான்: பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 26 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை

ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
 131 பேரின் பெயர்களை கொண்ட அந்த பட்டியலில், முதல்வர் வசுந்தரா ராஜே, ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தலைவர் கைலாஷ் மேக்வால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே எம்எல்ஏக்களாக இருக்கும் 26 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர்களில் 2 பேர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். மேலும் 2 பேர் முஸ்லிம் எம்எல்ஏக்கள் ஆவர்.
 85 தொகுதிகளில் தற்போது எம்எல்ஏக்களாக இருப்போருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களும் சில தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 கடந்த 2013ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிலருக்கும், இத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் சுரேந்திர கோயல், பழங்குடியினர் நல அமைச்சர் நந்த்லால் மீனா ஆகியோரின் பெயர்கள், முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இல்லை. இருப்பினும், அமைச்சர் மீனாவின் தொகுதியில் அவரது மகன், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 சட்டப் பேரவை துணைத் தலைவர் ராவ் ராஜேந்திர சிங், பாஜக கொறடா கலு லால் குர்ஜார் ஆகியோர் மீண்டும் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜெய்சால்மர்-பார்மர் தொகுதி எம்.பி. சோனம் ராமின் பெயரையும், பார்மர் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
 அமைச்சர் ராஜிநாமா; கட்சியிலிருந்து விலகல்: முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெயர் இடம்பெறாததோரில், 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவரும், அமைச்சருமான சுரேந்திர கோயலும் ஒருவர் ஆவார். தேர்தலில் தமக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததை தொடர்ந்து, அமைச்சர் பதவியிலிருந்து கோயல் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். மேலும், பாஜகவில் இருந்தும் விலகியுள்ளார். இதுதொடர்பான கடிதங்களை முதல்வர் வசுந்தரா ராஜே, பாஜக மாநில தலைவர் மதன் லால் சைனி ஆகியோருக்கு தனித்தனியே அவர் அனுப்பியுள்ளார்.
 ராஜஸ்தான் சட்டப் பேரவையில் உள்ள 200 தொகுதிகளுக்கும் வரும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 131 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக முதல்கட்டமாக தற்போது வெளியிட்டுள்ளது. எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விரைவில் அக்கட்சி வெளியிடும் எனத் தெரிகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com