மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம்: மத்திய அரசு மீது மம்தா சாடல்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்ற பரிந்துரையை தாமதப்படுத்தி வரும் மத்திய அரசை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.  
மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம்: மத்திய அரசு மீது மம்தா சாடல்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்ற பரிந்துரையை தாமதப்படுத்தி வரும் மத்திய அரசை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.  

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்க்ளா என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவை கடந்த ஜூலை 26-ஆம் தேதி நிறைவேற்றியது. இதையடுத்து, இந்த பரிந்துரை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்க பதிவில் கூறுகையில்,

"வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயரை பாஜக தங்களது விருப்பத்துக்கேற்றவாறு நாளுக்கு நாள் ஒருமனதாக மாற்றி வருகிறது. ஆனால், மேற்கு வங்கம் என்று வந்துவிட்டால் அவர்களது அணுகுமுறை முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. 

மாநிலத்தின் பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரை மத்திய உள்துறை அமைச்சகத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு, ஒரிஸா ஒடிஷா என்றும், பாண்டிச்சேரி புதுச்சேரி என்றும், மெட்ராஸ் சென்னை என்றும், பாம்பே மும்பை என்றும், பெங்களூர் பெங்களூரு என்றும் என பல மாநிலங்கள் மற்றும் நகரங்களின் பெயர் மாற்றப்பட்டு வருகின்றன. அம்மாநிலத்தின் உள்ளூர் மொழி உணர்வு என்கிற நோக்கத்தில் அணுகினால் அது நியாயமானது. 

மேற்கு வங்க உணர்வுகளின் அடிப்படையில் பங்க்ளா என்று தாய்மொழியில் பெயரை மாற்றுவதற்கான தீர்மானம் மேற்கு வங்க சட்டப்பேரையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.    
3 மொழிகளிலுமே பங்க்ளா என்ற பெயரையே பயன்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவரை வழங்கியது. அதன்படி, அனைத்து 3 மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை பங்க்ளா என்று மாற்றுவதற்கு எங்களது சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு திரும்ப அனுப்பப்பட்டது. 

ஒருசில பகுதிகளில் இருந்து பங்க்ளா எனும் பெயரின் உச்சரிப்பு வங்கதேசத்தின் உச்சரிப்பை ஒத்துப்போவதாக கருத்துகள் வருகிறது. இந்தியாவிலும் பஞ்சாப் இருக்கிறது. அண்டை நாட்டிலும் பஞ்சாப் இருக்கிறது. அதனால், பெயர்கள் தடங்கலை ஏற்படுத்தக்கூடாது.   

மேற்கு வங்கத்தில் துளி கூட பலமே இல்லாத ஒரு அரசியல் கட்சி மாநிலத்தின் பெயர் மாற்றத்தை தீ்ர்மானிக்கக்கூடாது. அரசமைப்பு கடமை மற்றும் கூட்டாட்சி அமைப்பின் அடிப்படையில், பெயர் மாற்றத்துக்கான பரிந்துரை மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு மதிப்பளிக்கவேண்டும். 

மேற்கு வங்க மக்களுக்கு உடனடியாக நேர்மறையான பதில் கிடைக்கவேண்டும்" என்றார்.

முன்னதாக, மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்காக மம்தா பானர்ஜி 3 முறை முயற்சிகளை மேற்கொண்டார். 2011-இல், பாஸ்சிம்பங்கா (Paschimbanga) என்ற பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. அதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. 

2016-இல், ஆங்கிலத்தில் வங்கம் என்றும், வங்காள மொழியில் பங்க்ளா என்றும், ஹிந்தி மொழியில் பங்கள் என்றும் மாற்றுவதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால், அதையும் மத்திய அரசு நிராகரித்தது. 

இதைத்தொடர்ந்து, தற்போது அதிகம் பேசப்படும் 3 மொழிகளிலுமே பங்க்ளா என்று பெயர் மாற்றக்கோரி 3-ஆவது முறையாக மம்தா பானர்ஜி பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அதற்கு ஒப்புதல் வழங்காமல் மத்திய உள்துறை அமைச்சகம் தாமதப்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com