அஸ்தானா வழக்கு: இடைத்தரகருக்கு ஜாமீன் மறுப்பு

சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தொடர்புடைய லஞ்ச வழக்கில், இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் மனோஜ் பிரசாத்துக்கு ஜாமீன் வழங்க தில்லி உயர்


சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தொடர்புடைய லஞ்ச வழக்கில், இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் மனோஜ் பிரசாத்துக்கு ஜாமீன் வழங்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில், ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ காவல் துறை துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டதாக துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் பிரசாத் உள்பட இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், தேவேந்தர் குமார் மற்றும் மனோஜ் பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தேவேந்தர் குமாருக்குக் கடந்த மாதம் 31-ஆம் தேதி ஜாமீன் அளித்து, தில்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமீன் மனு: தனக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மனோஜ் பிரசாத் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நஜ்மி வாஸிரி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரசாத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா, சுமார் ஒரு மாத காலமாக விசாரணை எதுவும் நடத்தப்படாமல் பிரசாத் காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனவே, அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று வாதாடினார்.
திசை திருப்பும்: இதனையடுத்து, சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி மற்றும் வழக்குரைஞர் ராஜ்தீபா பெஹரா ஆகியோர் பிரசாத்தை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், வழக்கின் விசாரணை முக்கியக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது விசாரணையை திசை திருப்பும் என்று வாதாடினர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வாஸிரி, சிபிஐ தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு பிரசாத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்னதாக, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றமும் பிரசாத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக சிபிஐ தங்கள் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அஸ்தானா, பிரசாத், தேவேந்தர் குமார் ஆகியோர் சார்பில் தனித்தனியாக தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை புதன்கிழமை(நவ.14) நடைபெற இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com