ராகுல், சோனியாவுக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு மீது டிசம்பர் 4இல் இறுதி விசாரணை

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோருக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு மீது டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி இறுதி விசாரணை
ராகுல், சோனியாவுக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு மீது டிசம்பர் 4இல் இறுதி விசாரணை


காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோருக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கு மீது டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் ஆகியோர் கடந்த 2011-12ஆம் நிதியாண்டில் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய வருமான வரித்துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி அனுமதித்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஆஸ்கர் பெர்ணான்டஸ் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. அப்துல் நாஸர் ஆகியோர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது வருமான வரித்துறை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கும்பட்சத்தில், தங்களது தரப்பு கருத்தை கேட்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கேவியட் மனுவை ஆய்வு செய்துவிட்டு நீதிபதிகள் கூறுகையில், வருமான வரித்துறை சார்பில் வழக்குரைஞர் ஆஜராகியுள்ளார். ஆதலால் மனுதாரர்களின் மனுக்கள் குறித்து விளக்கம் கேட்டு நாங்கள் நோட்டீஸ் அனுப்பவில்லை. இந்த விவகாரத்தில் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கிறோம் என்றனர்.
முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஆஸ்கர் பெர்ணான்டஸ் ஆகியோர் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் ப. சிதம்பரம், கபில் சிபல், அரவிந்த் தாதர் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். மூத்த வழக்குரைஞர் ப. சிதம்பரம் வாதாடியபோது, வருமான வரித்துறையின் வழக்கிற்கான காரணங்களை விளக்க முயற்சித்தார். அப்போது அவர் கூறுகையில், இதன் பின்னணி குறித்து நாங்கள் கவலைப்படவில்லை; ஆனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டதை மீண்டும் ஆய்வு செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது குறித்தே கேள்வியெழுப்புகிறோம். அந்த நோட்டீஸ் செல்லுமா? செல்லாதா? என்பதுதான் பிரச்னையாகும் என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், வருமான வரித்துறையில் இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இதுகுறித்து கேட்கலாம் என்றனர். இதை ப. சிதம்பரம் ஏற்கவில்லை. ஏற்கெனவே வைத்த வாதத்தை மீண்டும் முன்வைத்தார்.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஆஸ்கர் பெர்ணான்டஸ் ஆகியோர் அனுமானங்கள் தவறானவை என்றார். இருப்பினும், மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து பரிசீலனை நடத்த வேண்டியுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கின் பின்னணி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை, ராகுல், சோனியா ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90.25 கோடி அளவுக்கு கடன் அளித்ததை காரணம் காட்டி, அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது; இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்துவிட்டதாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இதனிடையே, இந்த பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்டு, ராகுல், சோனியா உள்ளிட்டோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் விசாரணையை தொடங்கினர். 2011-12ஆம் நிதியாண்டில் தனது வருமானம் ரூ.68 லட்சம் என்று ராகுல் கணக்கு காட்டியதாகவும், ஆனால், யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குநரான அவருக்கு அந்த ஆண்டு கிடைத்த வருவாய் ரூ.154 கோடி என்றும் வருமான வரித் துறை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, ராகுல், சோனியா காந்தி, யங் இந்தியன் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் கடந்த 2011-12இல் தாக்கல் செய்த வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்வதாக அவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நடவடிக்கையை எதிர்த்து ராகுல் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, தில்லி உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com