வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3- டி2 ராக்கெட்: திட்டமிட்ட பாதையில் ஜிசாட்-29 செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்

ஜிசாட்-29 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிசாட்-29 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட மார்க் 3-டி2 ராக்கெட்.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிசாட்-29 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட மார்க் 3-டி2 ராக்கெட்.


ஜிசாட்-29 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
திட்டமிட்டபடி மாலை 5.08 மணிக்கு... கஜா புயல் காரணமாக புதன்கிழமை இரவு முதல் பலத்த காற்று, மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தபோதும், திட்டமிட்டபடி புதன்கிழமை மாலை 5.08 மணிக்கு 3,423 கிலோ எடைகொண்ட ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் ராக்கெட் பலத்த சப்தத்துடன் தீயைக் கக்கியபடி சீறிப் பாய்ந்தது.
முதல் நிலையில் இரண்டு திட எரிபொருள் என்ஜின்கள், இரண்டாவது நிலையில் ஒரு திரவ எரிபொருள் என்ஜின், மூன்றாவது நிலையில் அதிக திறன்கொண்ட கிரையோஜெனிக் என்ஜின் என மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட் ஒவ்வொரு நிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்து சென்றது.
ராக்கெட் ஏவப்பட்ட 16 நிமிஷங்கள் 44 விநாடிகளில் அதில் இணைக்கப்பட்டிருந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பிரிந்து, திட்டமிட்டபடி பூமிக்கு அருகே 190 கிலோ மீட்டர் தூரத்திலும், பூமிக்குத் தொலைவில் 35,975 கிலோ மீட்டர் தூரத்திலும் தற்காலிக நீள்வட்டப் பாதையில் புவியைச் சுற்றிவரும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது.
வாழ்த்துத் தெரிவித்துக் கொண்ட விஞ்ஞானிகள்: ராக்கெட் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக மேலெழும்பிய உடனேயே விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் ஒவ்வொரு நிலையைக் கடக்கும்போதும் கைகளைத் தட்டி வரவேற்புத் தெரிவித்தனர். இறுதியில், செயற்கைக்கோள் திட்டமிட்ட தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதும், விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
படிப்படியாக உயர்த்தப்படும்: செயற்கைக்கோளில் இடம்பெற்றிருக்கும் அப்போஜி திரவ இன்ஜின் தரைக் கட்டுப்பாட்டு அறை மூலம் இயக்கப்பட்டு படிப்படியாக மேலெழுப்பும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொள்வர். அடுத்த ஒருசில தினங்கள் இவ்வாறு மேலெழுப்பப்பட்டு, திட்டமிட்ட இறுதி புவி சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும். 
ரூ.360 கோடியில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்: ஜிசாட்-29 செயற்கைக்கோள் ரூ.360 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இதில் நவீன டிரான்ஸ்மிட்டர் பேண்டுகள், ஆப்டிக்கல் தகவல்தொடர்பு சாதனங்களும் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளன. உயர் திறன்கொண்ட கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது.
மிகப் பெரிய சாதனை: இஸ்ரோ இப்போது அனுப்பியது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ரக இரண்டாவது ராக்கெட் ஆகும். முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4000 கிலோ எடையைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட இந்த ராக்கெட்டின் வெற்றி, இஸ்ரோ விஞ்ஞானிகளின் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்த மார்க்-3 ரக ராக்கெட் மூலம் ஜிசாட்-19 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இப்போது இரண்டாவது முயற்சியும் வெற்றிபெற்றுள்ளது.
இதன் மூலம், இனி தயக்கமின்றி மிக அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப முடியும் என்ற நிலைக்கு இஸ்ரோ உயர்ந்துள்ளது. அதாவது, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. போன்ற பயன்பாட்டு ராக்கெட்டுகள் வரிசையில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டும் இப்போது சேர்ந்துள்ளது. இந்த வெற்றி இஸ்ரோவுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பெருமை என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

எத்தனை செயற்கைக்கோள்கள்?
இந்த ராக்கெட் திட்டங்கள் மூலம் 97 இந்திய செயற்கைக்கோள்களையும், 239 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும், 9 மாணவர் செயற்கைக்கோள்களையும், 2 மறுமுறை அனுப்பும் செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது.

பயன் என்ன?
தகவல் தொடர்பு வசதியே பெரும்பாலும் கிடைக்காத பெரிய மலைத்தொடர்கள் சூழ்ந்த இந்தியாவின் வடகிழக்குப் பகுதி கிராமங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் உயர் தகவல் தொடர்பு வசதியை அளிப்பதே இந்த செயற்கைக்கோள் திட்டத்தின் முக்கிய நோக்கம். அதோடு, இதன் மூலம் அதிவேக இணையதள வசதியையும் இந்தியா பெற முடியும். 
மேலும், புவி வளங்கள் சார்ந்த தகவல்களை மிகத் தெளிவாகப் படம் பிடித்து தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த செயற்கைக்கோள் அனுப்பும்.

67-ஆவது ராக்கெட்
ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் புதன்கிழமை விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-டி2 ராக்கெட் இஸ்ரோ சார்பில் ஏவப்பட்ட 67-ஆவது ராக்கெட் ஆகும்.
எஸ்.எல்.வி.யைப் பொருத்தவரை 4 ராக்கெட்டுகள் அனுப்பப்பட்டு ஒன்று தோல்வியில் முடிந்தது. ஏ.எஸ்.எல்.வி.யைப் பொருத்தவரை 4-இல் 2 தோல்வியடைந்தது.
பி.எஸ்.எல்.வி.யைப் பொருத்தவரையில் 44-இல் 41 வெற்றி, 2 தோல்வி, ஒன்று பகுதி தோல்வி.
ஜி.எஸ்.எல்.வி. யைப் பொருத்தவரை 12-இல், 7 வெற்றி. 3 தோல்வி, 2 பகுதி தோல்வி.
ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 யைப் பொருத்தவரை, முதன் முறையாக 2014 டிசம்பரில் ஏவப்பட்டது. அப்போது, விண்வெளிக்கு ஆட்களைத் தாங்கிச் செல்லக் கூடிய 3.7 டன் எடை கொண்ட விண்கலத்துடன் இந்த மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
பின்னர் 2017 ஜூன் மாதத்தில் இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் முதன் முறையாக 3136 கிலோ எடை கொண்ட ஜிசாட்-19 என்ற தகவல்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக இந்த மார்க் 3 ராக்கெட் திட்டம் வெற்றிய அடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com