இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி ஏற்படுத்தப்படும்: பிரதமர் மோடி உறுதி

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பிரதமர்
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ச்சி, அமைதி ஏற்படுத்தப்படும்: பிரதமர் மோடி உறுதி


இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
13-ஆவது கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு, சிங்கப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டில் அவர் பங்கேற்றது, இது 5-ஆவது முறையாகும்.
கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பில், 10 தென் கிழக்கு ஆசிய நாடுகளும் (இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பின்ஸ், வியத்நாம், மியான்மர், கம்போடியா, புருணே, லாவோஸ்), ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூஸிலாந்து, தென்கொரியா, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. மேலும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்; பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடுநிலையோடு பின்பற்ற வேண்டும் என்பதிலும் உறுதியுடன் உள்ளது. அதுமட்டுமன்றி, கிழக்கு ஆசிய நாடுகளின் உறுப்பு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்; கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுகள் இன்னும் வலுப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த தகவல்களை வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறினார்.
முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
கிழக்கு ஆசிய நாடுகள் மாநாட்டுக்கு முன்னதாக, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா இடையேயான அலுவல் சாராத மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகையில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு வர்த்தகமும், கடல்சார் ஒத்துழைப்பும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
புத்தாக்க அறிவியல் போட்டி: இதனிடையே, இந்திய-சிங்கப்பூர் இடையேயான முதல் புத்தாக்க அறிவியல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 3 பொறியியல் கல்லூரி மாணவர்களும், சிங்கப்பூரைச் சேர்ந்த 3 பொறியியல் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 36 மணி நேரம் நடைபெற்ற போட்டியில், காரக்பூர் ஐஐடி, திருச்சி என்ஐடி, புணே எம்ஐடி பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதேபோல், சிங்கப்பூர் நன்யங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றனர். போட்டியின் வென்றவர்களுக்கு முதல் பரிசாக 10,000 சிங்கப்பூர் டாலர்களும், இரண்டாவது பரிசாக 6,000 சிங்கப்பூர் டாலர்களும், மூன்றாவது பரிசாக 4,000 சிங்கப்பூர் டாலர்களும் வழங்கப்பட்டன.
முன்னதாக, 2 நாள் பயணத்தில், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா ஆகியோரையும் பிரதமர் மோடி புதன்கிழமை தனித்தனியே சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, ஃபின்டெக் மாநாட்டில் கலந்து கொண்டு மோடி உரையாற்றினார். அப்போது, கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தாயகம் திரும்பினார் மோடி: அதைத் தொடர்ந்து, மோடி தனது 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூரில் இருந்து வியாழக்கிழமை மாலை தில்லி திரும்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com