மிகுந்த கவனத்துடனேயே ராணுவ தளவாட கொள்முதல்:   அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ராணுவ தளவாடங்களுக்கான கொள்முதல் எளிமைப்படுத்தப்பட்டு, விரைவுபடுத்தப்பட்டுள்ள போதிலும், மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படுகிறது
கோப்புப் படம்
கோப்புப் படம்


ராணுவ தளவாடங்களுக்கான கொள்முதல் எளிமைப்படுத்தப்பட்டு, விரைவுபடுத்தப்பட்டுள்ள போதிலும், மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறை புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை சங்கத்தின் சார்பில் இந்திய பாதுகாப்பு மாநாடு-2018 என்ற நிகழ்ச்சி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு தளவாட உள்நாட்டு உற்பத்தியாளர்களிடையே பேசியதாவது:
இந்திய உற்பத்தி நிறுவனங்களால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ராணுவ தளவாடங்களை வாங்குமாறு ஆயுதப் படையினை நான் வலியுறுத்த இயலாது. இந்திய தயாரிப்பு தளவாடங்களை வாங்கக் கூடிய வகையில் ஆயுதப் படைகளின் நம்பிக்கையை உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் தான் பெற வேண்டும். ஏனெனில் அந்தத் தளவாடங்களை முழுமையாக ஆயுதப் படைகளே பயன்படுத்துகின்றன.
ஆயுதப் படைகளை பயன்படுத்துவதற்கான காலம் வரும்போது, அவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது தான் எனது பணியாகும். அவற்றின் தயார் நிலைக்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது. பாதுகாப்புத் துறை அமைச்சர்களாக எனக்கு முன்பு பதவி வகித்த மனோகர் பாரிக்கர், அருண் ஜேட்லி ஆகியோர் ராணுவ தளவாட கொள்முதலை எளிமைப்படுத்தியதுடன், அதை வெளிப்படையானதாகவும் மாற்றியுள்ளனர்.
இருப்பினும் தளவாடக் கொள்முதலானது மிகுந்த கவனத்துடனும், விரைவாகவும் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய தளவாட உற்பத்தியாளர்கள் இந்தியச் சந்தையை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. பல்வேறு நாடுகள் தங்களுக்கான பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்ய இயலாதவையாக உள்ளன. அவர்களுக்கான தளவாட விற்பனையையும் இந்திய நிறுவனங்கள் முன்னெடுக்கலாம். 
இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டமானது, இந்தியாவுக்காக மட்டுமே தயாரிப்பது என்று அர்த்தமல்ல. உள்நாட்டு தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராயும் என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.
இதனிடையே, லக்னெள நகர மான்டசோரி பள்ளி ஒருங்கிணைத்த உலக தலைமை நீதிபதிகளுக்கான 19-ஆவது சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், பெண்கள் தங்களது பணிகளுக்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், இணையத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com