இந்தியா

பலத்த பாதுகாப்புடன் சபரிமலை நடை திறப்பு

DIN


சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
அங்கு, தலைமை தந்திரி கண்டரரூ ராஜீவரு, திரளான பக்தர்கள் குழுமியிருந்தனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, புதிய மேல்சாந்தியாக எம்.எல்.வாசுதேவன் நம்பூதிரி (ஐயப்பன் கோயில்), என்.நாராயணன் நம்பூதிரி (மாளிகைபுரம் கோயில்) ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
41 நாள் மண்டல விழா டிசம்பர் 27-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதன்பிறகு, கோயில் நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மண்டல பூஜைக்காக டிசம்பர் 30-ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.
இந்த இரண்டு மாத காலமும், சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த உத்தரவுக்கு பிறகு, சில நாள்கள் கோயில் நடை திறக்கப்பட்டிருந்தபோது, பெண்ணியவாதிகளும், பெண் பத்திரிகையாளர்கள் சிலரும் சபரிமலைக்கு சென்றனர். எனினும், பக்தர்களின் போராட்டம் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. போலீஸாரின் அறிவுறுத்தலை ஏற்று, அவர்கள் திரும்பினர்.
இந்த நிலையில், சபரிமலைக்கு வெள்ளிக்கிழமை வரவுள்ளதாக புணேவைச் சேர்ந்த மகளிர் உரிமை அமைப்பின் தலைவர் திருப்தி தேசாய் அறிவித்திருந்தார். அதன்படி, கொச்சி விமான நிலையத்துக்கு வந்த அவரை ஐயப்ப பக்தர்கள், சில அமைப்பினர், பாஜகவினர் ஆகியோர் தடுத்து நிறுத்தினர். திருப்தி தேசாயுடன் 6 பெண்களும் வந்திருந்தனர்.
கொச்சியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள நெடும்பசேரியில் உள்ள விமான நிலையத்துக்கு புணேவிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு திருப்தி தேசாய் வந்தார். அப்போது, உள்நாட்டு விமான முனையத்துக்கு அருகே நூற்றுக்கணக்கான பக்தர்களும், பாஜகவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்தி தேசாயும், அவருடன் வந்த இளம் பெண்களும் புணே நகருக்கு திரும்ப வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தினர்.
விமான நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் அப்புறப்படுத்தவில்லை. அதேநேரம், 200 பக்தர்களுக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஐயப்ப பக்தர்கள் அவர்களின் கோபத்தை வெளிப்படுத்தினர் என்று கேரள பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கூறினார்.
குடிமக்கள் எங்கும் செல்லும் உரிமையை தடுக்க பாஜக முயற்சி செய்கிறது என்று கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.
திட்டத்தை கைவிட்ட திருப்தி தேசாய்: சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யாமல் திரும்ப வேண்டாம் என்ற முடிவுடன் இருந்தேன். என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு அளிக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பினேன். போலீஸார் என்னை திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு எனது திட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளேன். மீண்டும் சபரிமலைக்கு வருவேன் என்று திருப்தி தேசாய் கூறினார்.
12 மணி நேரத்துக்கும் மேலாக கொச்சி விமான நிலையத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருப்தி தேசாய் தலைமையிலான குழுவினரை எங்கள் காரில் ஏற்றிச் செல்ல மாட்டோம் என்று விமான நிலையத்துக்கு வெளியே கார் ஓட்டுநர்கள் உறுதிபட தெரிவித்திருந்தனர்.
சபரிமலைக்கு 10 வயதுக்குள்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதற்கு கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி அனுமதி அளித்தது.
மகாராஷ்டிரத்தில் சனி சிங்கனாப்பூர், ஹாஜி அலி தர்கா, மகாலஷ்மி கோயில், திரியம்பகேஷ்வர் சிவன் கோயில் ஆகியவற்றில் பெண்கள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அங்கெல்லாம் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றவர் திருப்தி தேசாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT