ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: ம.பி. தேர்தலில் பாஜக வாக்குறுதி

மத்தியப் பிரதேசத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் பாஜக தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: ம.பி. தேர்தலில் பாஜக வாக்குறுதி


மத்தியப் பிரதேசத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் பாஜக தெரிவித்துள்ளது. மேலும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான வளர்ச்சியை உறுதி செய்வதே தலையாய நோக்கம் எனவும் பாஜக தெரிவித்துள்ளது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, வளமான மத்தியப் பிரதேசத்துக்கான தொலைநோக்கு அறிக்கை என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதிகளை போபாலிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சனிக்கிழமை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெண்களுக்கு இரு சக்கர வாகனம்: ஏழைகளுக்கு இலவசமாகக் கல்வி வசதி அளிக்கப்படும். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவிகளுக்கு இலவசமாக இருசக்கர வாகனம்(ஸ்கூட்டி) வழங்கப்படும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.40,000 கோடிக்குக் கடன்கள் வழங்கப்படும். சாகுபடி நிலப்பரப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 80 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரிக்கப்படும். உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் வகையில், புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
மாநிலத்திலுள்ள இளைஞர்கள் முன்னேற்றம் அடையும் வகையில், ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் சுயமாகத் தொழில் முனையும் வாய்ப்புகள் உருவாக்கப்படும். போபாலில் உலக அளவிலான திறன் பூங்கா அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில், ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில்துறை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
அரசின் சேவைகளை வீட்டிலிருந்தே அணுகும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்படும். 10 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படும்.
மாநிலத்தை மேலும் முன்னேற்றும் வகையிலும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படும். விவசாயிகள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், வணிகர்கள், இளைஞர்கள் ஆகியோரின் நலனை மேம்படுத்த கட்சி உறுதி பூண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஆன்மிகத்துக்குத் தனித்துறை: கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து மாநிலத்தை பாஜக ஆண்டுவரும் நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், பாஜக-விடம் இழந்த ஆட்சியை 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தக்கவைக்க காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
முக்கியமாக, மாநில அரசு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை எனவும், ஆட்சி சீர்குலைந்து விட்டதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேலும், கடந்த 10-ஆம் தேதி, தனது தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ், ஆன்மிகத்துக்குத் தனித்துறையை உருவாக்குவதாகவும், சமஸ்கிருத மொழியை ஊக்குவிப்பதாகவும், ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்ட பாதையைப் புணரமைக்க உள்ளதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com