பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு: நவ. 30 வரை பொறுத்திருப்பேன்: உபேந்திர குஷ்வாஹா

2019 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் பாஜக தங்களுக்கு ஒதுக்கிய இடங்களின் எண்ணிக்கை மதிக்கத் தகுந்ததாக இல்லை என்று அதன் கூட்டணிக் கட்சியான


2019 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் பாஜக தங்களுக்கு ஒதுக்கிய இடங்களின் எண்ணிக்கை மதிக்கத் தகுந்ததாக இல்லை என்று அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய லோக் சமதா தலைவர் உபேந்திர குஷ்வாஹா சனிக்கிழமை தெரிவித்தார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் வரும் 30-ஆம் தேதி வரையே பொறுத்திருக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, தனது கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாஜக தேசிய செயலர் (பொறுப்பு) பூபேந்திர யாதவை இருமுறை சந்தித்தேன். தொகுதிப் பங்கீடு மதிக்கத் தகுந்ததாகவோ, ஏற்புடையதாகவோ இல்லை என்று அவரிடம் தெளிவாகத் தெரிவித்தேன். தொகுதிப் பங்கீடு வரும் 30-ஆம் தேதி இறுதி செய்யப்பட வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக அமித் ஷாவை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. எனினும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தொலைபேசி வாயிலாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
இனி இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர்த்து வேறு எந்த பாஜக தலைவருடனும் பேசப்போவதில்லை. அவரைச் சந்தித்து பிகாரின் சூழ்நிலை குறித்தும், பிகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அவரை தவறாக வழிநடத்துவது குறித்தும் விளக்க உள்ளேன்.
நிதீஷ் குமார் எனது கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்களை தன் பக்கம் இழுப்பதன் மூலமாக எனது கட்சியை அழிக்க முயற்சிக்கிறார் என்று உபேந்திர குஷ்வாஹா கூறினார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சராக இருக்கும் குஷ்வாஹாவுக்கும், பாஜக கூட்டணியில் உள்ள பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தொகுதிப் பங்கீடு விவகாரத்தை குஷ்வாஹாவுடன் இணைந்து பாஜகவிடம் எடுத்துச் செல்ல மறுத்த ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார், தொகுதிப் பங்கீடு விவாதத்தை இத்தகைய தாழ்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.
நிதீஷ் குமாரின் இந்தக் கருத்தை தனக்கான அவமானமாக குஷ்வாஹாக கருதுகிறார். இந்த விவகாரத்தில் நிதீஷ் குமாருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக பாஜக தலைவரும், மாநில துணை முதல்வருமான சுஷில் குமார் மோடியையும் அவர் விமர்சித்துள்ளார்.
குஷ்வாஹாவின் இந்த நடவடிக்கைகள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், தனக்கும் இடையே பிளவு ஏற்படுவதை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த குஷ்வாஹா, தாம் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாகவே கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com