மாலத்தீவுடன் நெருங்கிய நட்புறவு: பிரதமர் மோடி விருப்பம்

மாலத்தீவுடன் நெருங்கிய நட்பு பாராட்ட வேண்டும் என்றும் இருநாடுகளுக்கு இடையே இருக்கும் நல்லுறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி விருப்பம்
மாலத்தீவின் புதிய அதிபராக சனிக்கிழமை பதவியேற்ற இப்ராகிம் முகமது சோலியை சந்தித்து வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி.
மாலத்தீவின் புதிய அதிபராக சனிக்கிழமை பதவியேற்ற இப்ராகிம் முகமது சோலியை சந்தித்து வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி.


மாலத்தீவுடன் நெருங்கிய நட்பு பாராட்ட வேண்டும் என்றும் இருநாடுகளுக்கு இடையே இருக்கும் நல்லுறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார்.
மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகமது சோலி (54) பதவியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அப்போது, அவருக்கு வாழ்த்து கூறிய மோடி, அவருடன் கலந்துரையாடினார்.
முன்னதாக, மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்திறங்கிய மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவர் அப்துல்லா மாசீ முகமது வரவேற்றார்.
பிரதமரான பிறகு, மாலத்தீவுக்கு மோடி சென்றது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2011-ஆம் ஆண்டு அங்கு சென்றிருந்தார்.
மாலத்தீவு முன்னாள் அதிபர்கள் முகமது நஷீத், மமூன் அப்துல் கயூம் ஆகியோருக்கு அருகில் மோடி அமர்ந்திருந்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில், இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாராதுங்காவும் பங்கேற்றார்.
மாலத்தீவு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார்.
புதிய அதிபருடன் மோடி கலந்துரையாடினார். அப்போது, பயங்கரவாதம், முதலீடு, பிராயந்திப் பாதுகாப்பு, விசா நடைமுறைகளை எளிமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினர். இப்ராகிமை இந்தியா வருமாறு மோடி அழைப்பு விடுத்தார்.
அவர் வருகைக்கான ஏற்பாடு செய்ய மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் வரும் 26-ஆம் தேதி தில்லி வரவுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், மாலத்தீவின் புதிய அதிபருடன் இந்தியா நெருங்கிய நட்பு பாராட்ட விரும்புகிறது என்று பிரதமர் மோடி கூறினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு நாள் பயணம் என்பதால், சனிக்கிழமையே மோடி தில்லி திரும்பினார்.
மாலத்தீவில் செப்டம்பர் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டார் இப்ராகிம் முகமது சோலி. தேர்தலில், அதிபர் அப்துல்லா யாமீனை இவர் வீழ்த்தினார்.
முன்னதாக, சுட்டுரையில் மோடி வெளியிட்ட பல்வேறு பதிவுகளில், உள்கட்டமைப்பு, சுகாதாரம், மனித வள மேம்பாடு, தகவல்தொடர்பு ஆகிய துறைகளில் இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று மாலத்தீவு புதிய அதிபரிடம் கூறுவேன். அங்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் மக்களின் விருப்பத்தை பிரதிபலித்தது. செழிப்புடன் அமைதியான நாடாக மாலத்தீவு விளங்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்துல்லா யாமீன், சீனாவுடன் நெருக்கமாக செயல்பட்டார். இந்தியர்களுக்கு தொழில் விசா வழங்குவதில் கட்டுப்பாடுகளை விதித்தது, சீனாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டது ஆகியவற்றால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. 
இந்த ஆண்டு தொடக்கத்தில் மாலத்தீவில் அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com