கோப்புப் படம்
கோப்புப் படம்

ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்த விவரத்தை வெளியிடுமாறு பிரான்ஸ் நிறுவனத்தை கட்டாயப்படுத்த முடியாது

ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த விவரத்தை வெளியிடுமாறு, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன்


ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த விவரத்தை வெளியிடுமாறு, பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தை கட்டாயப்படுத்த முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தையும், டஸால்ட் ஏவியேஷன் சேர்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை பொது துறை நிறுவனமான ஹெச்ஏஎல்-லுக்கு அளிக்காமல், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளிக்க உதவி செய்துள்ளார் என்றும், இதில் ஊழல் நடந்துள்ளது என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற ஆங்கில பத்திரிகை மாநாட்டில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
இந்திய நிறுவனத்துடன் டஸால்ட் செய்துள்ள ஒப்பந்த விவரத்தை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த விவரத்தை ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் கடமைப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும்.
எதிர்க்கட்சிகள் கேட்கின்றன, அந்த விவரத்தை தாருங்கள் என்று டஸால்ட் நிறுவனத்திடம் என்னால் கேட்க முடியாது. அந்நிறுவனத்தை என்னால் கட்டாயப்படுத்தவும் முடியாது.
ஒப்பந்த விதியின்படி, அந்த விவரங்களை அடுத்த ஆண்டு கூட அந்நிறுவனம் அளிக்கலாம். ரஃபேல் விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சி, தமது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டதுடன், அடுத்தடுத்து புதிது புதிதாக பிரச்னை எழுப்பி வருகிறது. முதலில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதாக அக்கட்சி தெரிவித்தது. தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட மோடி ஏன் அவசரப்பட்டார் என காங்கிரஸ் கேட்கிறது என்றார் நிர்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com