பிரிவினைவாத சக்திகளுக்கு ஊடகங்கள் துணைபோகக் கூடாது: பிரணாப் முகர்ஜி

பிரிவினைவாத சக்திகளுக்கு ஊடகங்கள் துணை போகக்கூடாது என்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் தில்லி பதிப்பான 'தி மார்னிங் ஸ்டாண்டர்டு' ஆங்கில பத்திரிகையை, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்துகிறார்  குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் தில்லி பதிப்பான 'தி மார்னிங் ஸ்டாண்டர்டு' ஆங்கில பத்திரிகையை, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்துகிறார்  குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி.

பிரிவினைவாத சக்திகளுக்கு ஊடகங்கள் துணை போகக்கூடாது என்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் தில்லியில் "தி மார்னிங் ஸ்டாண்டர்டு' என்ற ஆங்கிலப் பத்திரிகை அறிமுக விழா மான் சிங் சாலையில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பத்திரிகையை அறிமுகப்படுத்திவைத்தார். இதைத் தொடர்ந்து, "இந்திய ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு' என்ற தலைப்பில் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை:

1940-ஆம் ஆண்டு மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட மார்னிங் ஸ்டாண்டர்டு பத்திரிகையின் நவீனப்படுத்தப்பட்ட பதிப்பை தில்லியில் மீண்டும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்வடைகிறேன். திங்கள்கிழமை (நவம்பர் 19) வெளிவரவுள்ள இந்தப் பத்திரிகை, தனது குழும சகோதரப் பத்திரிகைகளின் பெருமையை பறை சாற்றும் என நம்புகிறேன். 

இந்த நேரத்தில், இந்தியப் பத்திரிகைத் துறையின் பிதாமகர் ராம்நாத் கோயங்காவை நினைவுகூர்கிறேன். "இந்திய ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு' என்ற தலைப்பில் பேசுமாறு கேட்கப்பட்டுள்ள இந்நிலையில், கடந்த சில தசாப்த காலமாக தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியால் ஊடகத்துறையில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியை நினைத்துப் பார்க்கிறேன். இந்தக் காலகட்டத்தில் ஊடகத் துறை பெரிய மாற்றத்தைச் சந்தித்தது. சமூக வலைதளங்களின் வருகை, ஒரு தொலைபேசி வைத்துள்ளவரே பதிப்பாளராகவும், ஒலிபரப்பாளராகவும் மாறலாம் என்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது.

 ஊடகத்தை இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகக் கூறுவர். என்னைப் பொருத்தவரை, ஊடகத் துறையே இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் மிகவும் பலம் வாய்ந்தது ஆகும். ஊடகங்கள், மக்களுக்கு தகவல் வழங்குகின்றன, மதிப்பீடு செய்கின்றன. மேலும், மக்களின் பொதுக் கருத்தை ஊடகங்களே வடிவமைப்பதுடன், அரசு, நீதித் துறை, மக்கள் பிரதிநிதிகள் ஆகிய மூன்றையும் ஊடகங்களே பொறுப்புக் கூறவைக்கிறது.

 இந்திய ஊடகத் துறைக்கு மிகப் பெரிய பாரம்பரியம் உள்ளது. இந்தியாவில் 70,000 நாளிதழ்கள் வெளியாகின்றன. ஒரு நாளில் மட்டும் சுமார் 100 மில்லியன் நாளிதழ்கள் விற்பனையாகின்றன. இந்தியாவில் 400 செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளன. இந்திய ஊடகத் துறையின் மதிப்பு ரூ. 1.5 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 13 சதவீதம் அதிகமாகும். 

ஊடகத்தைவிட ஐனநாயகத்துக்குப் பங்களிப்பு வழங்கும் வேறு துறையில்லை. இந்திய ஊடகத் துறை சுதந்திரமானது, கருத்துச் செறிவுள்ளது, அறிவு சார்ந்தது. இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் 22 மொழிகளைப் பேசுகிறார்கள்;29 மாநிலங்களில் வாழ்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஊடகங்கள் துணை போகக்கூடாது. ஊடகங்கள் அதிகார மையங்களின் பக்கம் நிற்கக் கூடாது. மாறாக அவர்கள் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை ஊடகங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் அடிப்படை அதன் பன்முகத்தன்மையில் இருப்பதாக நம்புகிறேன். இந்தியாவில் அனைவரும் சிறுபான்மையினர் எனக் கூறுவார்கள். இதனால், ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தல் தொடர்பாக நாம் கவனமாக இருக்க வேண்டும். அரசியல், வணிகம், சமூகம் போன்றவற்றில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் செய்திகளை வளைக்கப் பார்ப்பார்கள். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அதற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஊடகங்கள் இதற்கு இடம் கொடுக்கக் கூடாது. பன்முகத் தன்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கொண்டாடிய நாகரிகம் இந்திய நாகரிகம் ஆகும். பல வேறுபாடுகள் இருந்தாலும் பல ஆண்டுகளாக இந்த இயல்புகள்தான் நம்மைப் பிணைத்து வைத்துள்ளது. அதிகாரத்துக்கும் மக்களுக்குமான கண்காணிப்பாளராகவும், நடுவராகவும், காவலராகவும் இருக்க வேண்டியது ஊடகங்களின் கடமையாகும். அதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்வி கேட்க வேண்டியது ஊடகங்களின் கடமையாகும்.

நவீன இந்தியாவின் வரலாற்றை வடிவமைத்ததில் ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திரத்துக்கு பிறகு ஜனநாயகத்தின் காவலராக ஊடகங்கள் இருந்தன. பல ஊழல்களை வெளிக்கொண்டு வந்தன. இப்போது, நவீனத் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு, பொய்ச் செய்திகள் மிகப் பெரிய அபாயமாக மாறியுள்ளன. இவை சமூகங்கள், மதங்கள், இனங்களுக்கிடையே பதற்றங்களை திட்டமிட்டு ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக ஊடகங்களும், மக்களும் விழிப்புடன் இருப்பது அவசியம். அரசியல், சமூக, பொருளாதார அடிப்படைகளைச் சிதைக்கும் சக்திகள் முனைப்பாக இயங்கும் இந்த வேளையில், ஊடகங்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் அவர். 

இந்நிகழ்வில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர், மேலாண்மை இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் வாசு, தி மார்னிங் ஸ்டாண்டர்டு பதிப்பாசிரியர் கோகென் சிங், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, பத்திரிகையாளர்கள் ஆஷு தோஷ், நளினி சிங், தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் இரா.முகுந்தன், எழுத்தாளர் கிருங்கை சேதுபதி, பேராசிரியர் சி.அருணண், வ.உ.சி.யின் பேரன் முத்துக்குமாரசுவாமி, தில்லி தமிழ்க் கல்விக் கழகச் செயலர் ஆர்.ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com