2019 மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை: சுஷ்மா

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், அடுத்தமுறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை: சுஷ்மா


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், அடுத்தமுறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவரான அவர், தற்போது உடல்நிலை காரணமாகவே தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்திருப்பதாகக் கூறியுள்ளார். 
எனினும் அரசியலை தொடருவது அல்லது கைவிடுவதற்கான வாய்ப்பு அல்லது மாநிலங்களவைக்கு தேர்வாவதற்கான வாய்ப்பு போன்றவை குறித்து அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
முதல்வர், மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளை சுஷ்மா வகித்துள்ளார். குறிப்பாக, தில்லியின் முதலாவது பெண் முதல்வர் என்ற பெருமையும், இந்திரா காந்திக்கு பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் இருக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையும் சுஷ்மாவுக்கு உண்டு. 
1977இல் தனது 25ஆவது வயதில் ஹரியாணா மாநில சட்டப்பேரவை உறுப்பினராகவும், அப்போதைய ஜனதா அரசில் அமைச்சராகவும் பதவி விகித்தவர் சுஷ்மா. மாநிலங்களவை, மக்களவை என இரண்டிலும் சேர்த்து 7 முறை எம்.பி.யாகவும், வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராகவும் அவர் இருந்திருக்கிறார்.
சுஷ்மாவின் அரசியல் வாழ்வு நீண்ட, நெடிய வரலாறு கொண்டது என்றாலும், கடந்த 1999ஆம் அவர் எதிர்கொண்ட தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைப்பதாக அமைந்தது. கர்நாடக மாநிலத்தில், நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து காங்கிரஸின் கோட்டையாகவே இருந்து வந்த பெல்லாரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக பாஜகவின் வேட்பாளராக அத்தொகுதியில் சுஷ்மா களமிறங்கினார். அந்தத் தேர்தலில் அவர் தோல்வியை தழுவியிருந்தாலும், அவர் ஏற்படுத்திய கடும் போட்டி காரணமாக குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே சோனியா காந்தி வெற்றி பெற்றார் என்பது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விஷயமாக அமைந்தது.
போட்டியில் விலகுவது ஏன்?: உடல்நிலை சரியில்லாமல் போனதால் நேரடி அரசியலில் இருந்து சுஷ்மா ஸ்வராஜ் விலகியிருப்பதாக விமர்சனம் இருந்து வந்தது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் செய்தியாளர்கள் இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினர். 
அதற்கு சுஷ்மா பதில் அளிக்கையில், அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற மனநிலைக்கு நான் வந்துவிட்டேன். இதுகுறித்து கட்சித் தலைமைக்கும் தெரியப்படுத்தியிருக்கிறேன். இனி கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். கடந்த ஓராண்டாக சிறுநீரகப் பாதிப்பு காரணமாக நான் இயல்பாக இயங்க முடியவில்லை. தேர்தல் கூட்டங்களில் ஓராண்டாக பங்கேற்கவில்லை என்பதால், நான் அரசியலை விட்டே விலகியிருக்கிறேன் என நீங்கள் நினைப்பீர்களேயானால், அது சரியானதாக இருக்காது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com