இந்தியா

சத்தீஸ்கர் பேரவைத் தேர்தலில் 74% வாக்குப்பதிவு

DIN


சத்தீஸ்கரில் இரு கட்டங்களாக நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமாக 74.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 
முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 76.42 சதவீதமும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 72 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் 71.93 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
சத்தீஸ்கரில் முதல்வர் ரமண் சிங் தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் டிசம்பரில் நிறைவடைவதையொட்டி, அங்கு சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில், இரு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நக்ஸல் பாதிப்பு மிகுந்த 18 தொகுதிகளில் கடந்த 12ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
2-ஆவது மற்றும் இறுதிக்கட்டமாக 72 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் 1.54 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களுக்காக 19,336 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக சுமார் 1.50 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
இதுதொடர்பாக, துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சத்தீஸ்கர் 2ஆம் கட்ட தேர்தலில் 71.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இரு கட்ட தேர்தல்களையும் சேர்த்து, மொத்தம் 74.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் 77.42 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது வாக்குப்பதிவு குறைந்துள்ளது என்றார்.
இதனிடையே, மர்வாஹி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் முதன்மை அதிகாரியாக இருந்த சுரேந்திர குமார் மண்டவி, வேறொரு வாக்குச்சாவடியின் ஊழியர் கமல் கிஷோர் ஆகியோர் மீது பல்வேறு கட்சிகளின் முகவர்கள் புகார் எழுப்பினர். இதையடுத்து, இருவரும் தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
முதல்வர் வாக்களிப்பு: கவார்தா தொகுதியிலுள்ள வாக்குச்சாவடியில், முதல்வர் ரமண் சிங், தனது மனைவி வீணா சிங், மகனும் பாஜக எம்.பி.யுமான அபிஷேக் சிங் ஆகியோருடன் வந்து வாக்களித்தார். 72 தொகுதிகளிலும் மொத்தம் 1,079 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மும்முனைப் போட்டி: மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 2000இல் உருவான சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வராக பதவியேற்றவர் அஜீத் ஜோகி. அவர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 3 ஆண்டுகளே நீடித்தது. அடுத்து நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்றது.
பாஜக  காங்கிரஸ் என இருமுனை போட்டியையே சந்தித்து வந்த சத்தீஸ்கரில், இப்போது மும்முனை போட்டி நிலவுகிறது. அதாவது, காங்கிரஸில் இருந்து விலகி, ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற தனிக்கட்சியை தொடங்கிய அஜீத் ஜோகியுடன், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கைகோத்து, மூன்றாவது அணியாக களத்தில் உள்ளது.
டிசம்பர் 11ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT