இந்தியா

தென்சீன கடல்பகுதியில் இந்தியாவும், வியத்நாமும் விதிகளை கடைப்பிடிக்கின்றன: ராம்நாத் கோவிந்த்

DIN


தென்சீனக் கடல் பகுதியை உள்ளடக்கிய இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டதொரு பார்வையை இந்தியாவும், வியத்நாமும் கொண்டுள்ளன என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். 
இறையாண்மைக்கு மதிப்பளிப்பது, பிராந்திய ஒற்றுமையை கடைப்பிடிப்பது, கட்டுப்பாடற்ற கடல் பயணம், கடலுக்கு மேலே விமானப் பயணம், கட்டுப்பாடற்ற வர்த்தகம் ஆகியவவை குறித்து இந்தியாவும், வியத்நாமும் பொதுவான பார்வையைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
வியத்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும் தென்சீனக் கடலில் உரிமையுள்ள நிலையில், அந்தக் கடல் பகுதி முழுவதுமே தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. 
இத்தகைய சூழலில், தென்சீனக் கடல் பகுதியில் விதிகள் அடிப்படையிலான பார்வையை இந்தியாவும், வியத்நாமும் கொண்டிருப்பதாக ராம்நாத் கோவிந்த் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. வியத்நாம் நாடாளுமன்ற அவையில், ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோது இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். அவர் பேசியதாவது:
வலுவான வர்த்தகம், அரசியல், பொதுமக்களுக்கு இடையிலான பந்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்தியாவுக்கும், வியத்நாமுக்கும் இடையே தொடர்பிருக்கிறது.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளும் பொதுவான இலக்கை கொண்டுள்ளன. அதில் தென்சீனக் கடல்பகுதியும் முக்கியமானதொரு அங்கம். 
இறையாண்மைக்கு மதிப்பளிப்பது, பிராந்திய ஒற்றுமையை கடைப்பிடிப்பது, கட்டுப்பாடற்ற கடல் பயணம், கடலுக்கு மேலே விமானப் பயணம், கட்டுப்பாடற்ற வர்த்தகம் ஆகியவவை குறித்து நாம் பொதுவான பார்வையைக் கொண்டுள்ளோம்.
பிரச்னைகளுக்கு அமைதியான தீர்வை நாம் கோரி வருகிறோம். சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட விதிமுறைகள் மற்றும் ராஜீய நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு நாம் மதிப்பளித்து வருகிறோம். மேலும், கடல் மேலாண்மை குறித்து ஐ.நா. இயற்றிய விதிமுறைகளையும் இருநாடுகளும் பின்பற்றி வருகின்றன.
இந்தியாவும், வியத்நாமும் பழமையான கடல்சார்ந்த தேசங்கள். இந்திய பசிபிக் பிராந்தியத்தின் வர்த்தகம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் நாமும் பங்கு வகிக்கிறோம். எல்லாவற்றையும் விட, இந்தத் துறைகளில் நாம் ஒரே மாதிரியான கருத்துக்களை கொண்டுள்ளோம். 
நட்பு நாடுகள் தொடர்பில் இந்தியா கடைப்பிடிக்கும் ஒத்துழைப்பு முறை என்பது அவர்களுக்கான விருப்பத் தேர்வுகளையும், வாய்ப்புகளையும் வழங்குவதாக இருக்கும். அதாவது, இந்தியா ஒருவழி சாலையை திறப்பதில்லை. மாறாக பலவழி கொண்ட சாலைகளை திறக்கிறது.
மகாத்மா காந்தி, வியத்நாமின் ஹோ சி மின் போன்றவர்கள் நாம் சார்ந்த தேசங்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஆசிய கண்டத்துக்கும், சர்வதேச சமுதாயத்துக்கும் தொடர்ந்து உந்துசக்தியாக இருப்பவர்கள். இனி வரும் ஆண்டு, அந்த தலைவர்களுக்கு இடையே மீண்டும் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதாகவும், இரு நாடுகளையும் ஒற்றுமைப்படுத்துவதாகவும் அமையும் என்றார் கோவிந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT