இந்தியா

மக்களவைத் தேர்தலில் வெல்ல முடியாது என்பது பாஜகவுக்கு தெரியும்: ராகுல் காந்தி

DIN


அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தங்களால் வெல்ல முடியாது என்பது பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் நன்றாகத் தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மிஸோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தின் சம்பாய் பகுதியில் தனது முதல் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது: மிஸோரம் மாநிலத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. ஏனெனில், மாநிலத்தில் கலாசாரத்தை ஒழித்தால் மட்டுமே இங்கு காலூன்ற முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தங்களால் வெல்ல முடியாது என்பது பாஜகவுக்கும், அதன் தலைமை பீடமான ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் நன்றாகத் தெரியும். எனவே, மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை முடிந்த அளவுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்களைத் தங்கள் வசம் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
இந்த மாநிலத்தில் முக்கியக் கட்சியாக உள்ள மிஸோ தேசிய முன்னணி, தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தில் உள்ளது. மாநிலத்தில் மொழி, பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை சீர்குலைக்கும் முயற்சிக்கு மிஸோ தேசிய முன்னணியும் துணை போகிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மிஸோரம் மாநிலத்தைக் காப்பாற்ற முடியும். பாஜகவின் சதிகளை எங்களால் மட்டுமே முறியடிக்க முடியும். மத்தியில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் ஊழலில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. 
உதாரணமாக ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் தனது நண்பரான அனில் அம்பானிக்கு ரூ.30,000 கோடியை பிரதமர் மோடி பெற்றுத் தந்துள்ளார். இது தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஓராண்டுக்கான செலவுத் தொகையாகும். இதுபோன்றவர்களை மிஸோரம் மாநிலத்தில் அனுமதிக்கக் கூடாது.
மேலும், தேர்தல் ஆணையம், சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட்டு தங்களுக்கு சாதகமாக செயல்பட வலியுறுத்துகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக தகுதி இல்லாதவர்கள் ஆளுநர்களாகவும், பல்கலைக்கழக துணை வேந்தர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே தங்களுக்கு சாதகமாக ஆட்டிப்படைக்க முயல்கிறார்கள்.
மிஸோரம் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் காங்கிரஸ் கட்சி பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மாநிலத்தை பொருளாதாரரீதியாக முன்னேற்றியுள்ளோம். மாநிலத்தில் தனிநபர் வருமானம் இரு மடங்காகியுள்ளது என்றார் ராகுல்.
சிபிஐ விவகாரம் மர்ம நாவல் போல உள்ளது : சிபிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் வெளிப்பட்டு வரும் விஷயங்கள் குற்றங்கள் அடங்கிய மர்ம நாவல் போல் உள்ளது. வேலியே பயிரை மேய்கிறது என்று கூறப்படுவதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணையில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய அமைச்சர் செளதரி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி) கே.வி. செளதரி ஆகியோர் தலையிட முயற்சித்ததாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மூத்த அதிகாரி எம்.கே. சின்ஹா கூறியுள்ளார். இது வேலியே பயிரை மேய்கிறது என்று கூறப்படுவதற்கு உதாரணமாக உள்ளது. குற்றங்கள் அடங்கிய மர்ம நாவலைப் போல இந்த விசாரணையில் உண்மைகள் வெளிப்பட்டு வருகின்றன என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT