ஐயப்ப பக்தர்களுக்கு எதிராக கடுமையான அணுகுமுறை: காவல் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்

சபரிமலை ஐயப்ப பக்தர்களை கடுமையான முறையில் காவல் துறையினர் அணுகியதாகக் கூறப்பட்ட வழக்கில், காவல் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சபரிமலை ஐயப்ப பக்தர்களை கடுமையான முறையில் காவல் துறையினர் அணுகியதாகக் கூறப்பட்ட வழக்கில், காவல் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கோயில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை விதித்தது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களை காவல்துறையினர் தவறாக நடத்தியதாக கேரள உயர்நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நீதிபதிகள் பி. ஆர். ராமச்சந்திர மேனன் மற்றும் என். அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் வகையில் என்ன நடந்தது என்பது குறித்து ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
பக்தர்களைத் தவறான முறையில் அணுகியதற்காக சபரிமலை பாதுகாப்பு பணி காவல் துறை அதிகாரியை விமர்சித்த நீதிபதிகள், நிலக்கல் முகாம் மற்றும் சபரிமலை பகுதியில் பக்தர்களை நடத்திய விதத்துக்கு காவல் துறை கண்காணிப்பாளருக்கும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அந்த அதிகாரிகள் குற்றப் பின்னணி உடையவர்களா என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும், ஐயப்ப பக்தர்கள் குழுவாக செல்வதற்கும், ஐயப்ப நாமத்தை உச்சரிப்பதற்கும் தடை விதிக்கக் கூடாது என்று காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த கட்ட விசாரணையின்போது, இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டனர். 
சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தப் போவதாக கேரள அரசு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து சபரிமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், சபரிமலை கோயில் வளாகத்தில் ஐயப்பன் நாமத்தை உச்சரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று கூறி 69 பக்தர்களை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். அதற்கு, காவல் துறையினர் இது போன்ற அணுகுமுறையை மீண்டும் தொடர்ந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

பாஜக நிர்வாகி உள்பட சபரிமலையில் கைதான 72 பேருக்கு ஜாமீன் 
சபரிமலை கோயிலுக்கு வழிபாடு நடத்த சென்றபோது கைது செய்யப்பட்ட கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் சுரேந்திரன் உள்பட 72 பேருக்கு புதன்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 
எனினும், சுரேந்திரன் சிறையில் இருந்து வெளிவர வேண்டுமெனில், கண்ணூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றொரு வழக்கிலும் அவர் ஜாமீன் பெற்றாக வேண்டும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரேந்திரன் இருமுடி கட்டி வந்தார். நிலக்கல்லில், சுரேந்திரன் மற்றும் அவருடன் வந்த இருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் சபரிமலைக்கு சென்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. அதையும் மீறி மலையேற முற்பட்டதால் சுரேந்திரன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோன்று, சபரிமலை கோயில் வளாகத்தில் ஐயப்ப பஜனை நடத்திய 69 பக்தர்களையும் காவல்துறை கைது செய்தது. அவர்கள் அனைவரும், கோயில் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள தடையாணையை மீறியதாக காவல்துறை தெரிவித்தது.
இந்தச் சூழலில், சுரேந்திரன் உள்ளிட்ட 72 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள், பத்தனம்திட்டாவில் உள்ள முனிசிபல் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. 
அப்போது, சபரிமலை கோயில் அமைந்துள்ள ரான்னி தாலுகாவுக்குள் இரண்டு மாதங்களுக்கு நுழைய கூடாது, ஒவ்வொரு நபரும் தலா ரூ.20,000 மதிப்பில், 2 தனிநபர் ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.
மகரவிளக்கு மண்டல பூஜைக் காலமான இந்த இரண்டு மாத காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் முன்வைத்திருந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com