புதுப்பிக்கவல்ல எரிசக்தியின் கொள்திறன் 72 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பு: மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் தகவல்

நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி, நிறுவப்பட்ட கொள்திறன் 34 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது


நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி, நிறுவப்பட்ட கொள்திறன் 34 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று மத்திய மின்சாரம், புதிய, புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையின் இணையமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் வீட்டு மின்மயவசதி எனும் தலைப்பில் மத்திய மின் துறை இணை அமைச்சர் ஆர்.கே. சிங்புதன்கிழமை எழுதியுள்ள கட்டுரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
நாட்டில் அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் அளிப்பதற்கான இலட்சிய இலக்கை உருவாக்கி இருக்கிறோம். நெட்வொர்க்கிற்கு மின் வசதியை அளிப்பது மட்டுமின்றி, தரமான, நம்பகமான மின்சாரம் வழங்குவதையும் உறுதிப்படுத்த மின்துறை மதிப்பீடு சங்கிலித்தொடர் முழுவதும் தேவையான உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இது போன்ற ஒரு முயற்சி நடவடிக்கைகள் உலகில் எங்கும் காணப்படாதவை.
2018 , ஏப்ரல் 28-ஆம் தேதி நாடு 100 சதவீத கிராமப்புற மின்மயமாக்கலை எட்டியது. இது அனைவருக்கும் மின்மயம் எனும் விஷயத்தில் முக்கிய மைல் கல்லாகும். இந்த நடவடிக்கையானது எஞ்சியுள்ள 18,500-க்கும் மேற்பட்ட கிராமங்களை மின்சார ஒருங்கிணைப்பில் இணைப்பது மட்டுமின்றி, சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருட்டில் இருந்த பரம ஏழைகளைச் சென்றடைவதற்கான நடவடிக்கையாகும்.
அனைத்து வீடுகளுக்கும் மின்வசதியை அளிக்கும் நோக்கில் 2017-ஆம் ஆண்டில் சௌபாக்யா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை 2019, மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும் என்று எங்களுக்குள் கால வரையறை செய்தோம். இதுபோன்ற ஓர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட திட்ட முயற்சி உலகில் வேறு எங்கும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
இத்திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் வீடுகளுக்கு விளக்கு வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கையில் எந்த நாடும் ஈடுபடவில்லை. தங்களது வீடுகளில் விளக்கு வெளிச்சம் வருவதை பார்க்கும் முகமலர்ச்சி ஏற்படுவதைக் காண வேண்டும். 
இத்திட்டம் தொடங்கியது (2017, அக்டோபர்) முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை 2 கோடி குடும்பங்களுக்கு விளக்கு வசதி அளிக்கப்பட்டிருப்பது ஒரு மைல்கல்லாகும். நாட்டில் வளர்ந்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உற்பத்திக் கொள்திறனை அதிகரிப்பது அவசியமாகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்த மின்சார நிறுவு கொள்திறன் ஒரு லட்சம் மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது. 
இதன் மூலம் எரிசக்தி பற்றாக்குறை 4.2 சதவீதத்தில் இருந்து 0.7 சதவீதமாக குறைந்திருக்கிறது. அதேபோன்று, இந்தியா முதல் முறையாக தனது உள்தேவைக்குப் பிறகு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது.
நேபாளம், வங்கதேசம், மியான்மர் போன்ற அண்டை நாடுகளுக்கு 7, 203 மெகாவாட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதன் மூலம் உதவியிருக்கிறது.
அதேபோன்று, கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த புதுப்பிக்கவல்ல எரிசக்தி மின்சாரத்தின் நிறுவப்பட்ட கொள்திறன் 34 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் இருந்து 72 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. 
சூரிய சக்தி நிறவு கொள்திறன் நான்கு ஆண்டுகளில் 8 மடங்காக அதிகரித்துள்ளது. சர்வதேச அரங்கில் எங்கள் இலக்கை அடையும் நோக்கில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என அக்கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com