2030-ஆம் ஆண்டுக்குள் இயற்கை ஆற்றல் உற்பத்தி முழுமைபெறும்: பிரதமர் மோடி

சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு புதுதில்லியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. 
2030-ஆம் ஆண்டுக்குள் இயற்கை ஆற்றல் உற்பத்தி முழுமைபெறும்: பிரதமர் மோடி

கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பை ஏற்படுத்தியது. இதில் தகுதிவாய்ந்த 121 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை இணைக்கும் திட்டமும் ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய ஆயிரம் ஜிகாவாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டது. 

இந்த கூட்டமைப்பில் இணைந்த நாடுகள் உறுப்பினர்கள் என்ற அடிப்படையிலும் இதர நாடுகள் பார்வையாளர்களாகவும் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு புதுதில்லியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டேரஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

உலகளவிலான ஆற்றல் உற்பத்தியில் இன்றைய காலகட்டத்தில் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு வகித்து வரும் பங்கை, வரும் காலகட்டங்களில் சூரிய மின்சக்தி உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு ஈடுசெய்யும் நிலை ஏற்படும். தற்போது எண்ணெய் கிணறுகளால் சார்ந்துள்ள ஆற்றல் உற்பத்தி நாளை சூரிய கதிர்களைக் கொண்டு பிரதிபலிக்கப்படும். 

பாரீஸ் ஒப்பந்தத்தில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படையில் மறுசுழற்சி ஆற்றலைக் கொண்டு இயங்கும் விதமாக அனைத்தும் வடிவமைக்கப்படும். இதனால் 2030-ஆம் ஆண்டுக்குள் நம்முடைய மின் ஆற்றலின் 40 சதவீத தேவையை எண்ணெய் உற்பத்தி ஆற்றல் கொண்டு அல்லாமல் இயங்கும் விதமாக உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

ஆற்றல் உற்பத்தி ஏற்படுத்தப்படும் அதே சமயத்தில் அந்த ஆற்றலை சரியாக சேமித்து வைக்கும் திட்டங்களும் மிகவும் அவசியமானதாகும். எனவே பசுமை ஆற்றல் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறோம். இதன்மூலம் பசுமை ஆற்றலின் தேவையை உருவாக்குதல், அதில் உள்நாட்டு உற்பத்தி, புதுமை & ஆற்றல் சேமிப்பு உள்ளிட்டவற்றின் கொள்கை முடிவுக்கு ஆதரவளிக்க இந்த அரசு தயாராகி வருகிறது.

இவற்றில் சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி ஆற்றல் மட்டுமல்லாமல் பயோ மின்சக்தி ஆற்றலை ஊக்குவிக்கும் விதமாகவும் நடைமுறைகள் ஏற்டுத்த திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் இயற்கைக்கு பாதிப்பில்லாத வகையில் போக்குவரத்து அமைப்பை சுத்தமான ஆற்றலைக் கொண்டு இயங்கும் ஒன்றாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றி அதன்மூலம் மறுசுழற்சியில் இருந்து எரிசக்தி ஆற்றலை உருவாக்கும் நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். 

வளிமண்டலங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை பாதிப்புகளைக் குறைக்காமல் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியாது. அவ்வாறு இருக்கையில் ஆரோக்கியமான உலகையும், அமைதி மற்றும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கம் நிறைவேறாது. இதை எப்படி செய்ய வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். இதைச் செய்வதற்கு  அரசியல் பொறுப்புணர்வு மிகவும் அவசியமானதாகும். எனவே இந்த பற்றாக்குறை விரைவில் போக்கப்பட வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டேரஸ் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com