எம்.ஜே.அக்பர் ராஜிநாமா உண்மைக்கு கிடைத்த வெற்றி: எதிர்க்கட்சிகள்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், தனது பதவியை ராஜிநாமா செய்தது மீ டூ இயக்கத்துக்கும், உண்மைக்கும் கிடைத்த


பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், தனது பதவியை ராஜிநாமா செய்தது மீ டூ இயக்கத்துக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
மீ டூ இயக்கம் குறித்து இப்போதாவது பிரதமர் நரேந்திர மோடி பேசத் தயாரா? என்றும் அக்கட்சிகள் சவால் விடுத்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகினி நாயக் கூறுகையில், சுமார் 36 பெண்கள் அக்பருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தனர். 
அதைத் தொடர்ந்து அவர் ராஜிநாமா செய்துள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து மௌனம் காத்து வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
அக்பர் பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம் தார்மீக வெற்றி கிடைத்துள்ளதாகவும், மீ டூ இயக்கத்துக்கு ஆதரவை தொடர்ந்து நல்குமாறும் காங்கிரஸ் மகளிரணித் தலைவர் சுஷ்மிதா தேவ் சுட்டுரையில் பதிவு வெளியிட்டுள்ளார்.
எம்.ஜே.அக்பர் ராஜிநாமா செய்துள்ளது மீ டூ இயக்கத்துக்கு கிடைத்த வெற்றி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தெரிவித்தன. இரு கட்சிகளின் மகளிரணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அக்பர் முன்கூட்டியே ராஜிநாமா செய்திருக்க வேண்டும். மிகவும் தாமதமாக அவர் ராஜிநாமா செய்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் டி.ராஜா கூறுகையில், அக்பர் ராஜிநாமா செய்தது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனைத்து பெண்களுக்கும் கிடைத்த தார்மிக வெற்றியாகக் கருதலாம். தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை தைரியமாக சொல்வதற்கு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சூழலை நாடு தற்போது கொண்டிருக்கிறது என்றார்.
மோடி அரசு அக்பரை ராஜிநாமா செய்யுமாறு அறிவுறுத்தியிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதுகிறேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சுதார் ரெட்டி தெரிவித்தார்.
அவரை ராஜிநாமா செய்ய வைத்தது மட்டும் போதாது; குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர் திலீப் பாண்டே வலியுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com