இந்தியா

ஆசியான், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

DIN


சிங்கப்பூருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு அமெரிக்கா மற்றும் ஆசியான் நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார்.
ராணுவ நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக அவர்கள் அப்போது ஆலோசித்தனர்.
ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் நிலையிலான மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. அதில், அமெரிக்கா,ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூஸிலாந்து, தென் கொரியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நிர்மலா சீதாராமன் சிங்கப்பூருக்கு வியாழக்கிழமை சென்றார். மாநாட்டின் ஒரு பகுதியாக பிற நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸை நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்தனர்.
ரஷியா மீது அமெரிக்கா பொருளதாரத் தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டது. இது இந்திய - அமெரிக்க உறவில் சில சங்கடங்களை ஏற்படுத்தக் கூடும் என செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. சில நிமிடங்கள் நீடித்த அந்தச் சந்திப்பில் ரஷிய விவகாரம் பேசப்பட்டதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதைத் தவிர, மலேசிய அமைச்சர் முகமது பின் சாபு, ஆஸ்திரேலிய அமைச்சர் கிரிஸ்டோபர் பைன், பிலிப்பின்ஸ் அமைச்சர் டெல்ஃபின் லோரன்ஸானா, வியத்நாம் அமைச்சர் கோ சுவான் லிச் உள்ளிட்டோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்.ஜி. எங்ஹென்னையும் அவர் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டை நிறைவு செய்துவிட்டு நிர்மலா சீதாராமன் வரும் ஞாயிற்றுக்கிழமை தாயகம் திரும்ப உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT