2020 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பின் பிஎஸ்-4 வாகன விற்பனை கூடாது

வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்-4) வாகனங்களை விற்பனை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
2020 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பின் பிஎஸ்-4 வாகன விற்பனை கூடாது


வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்-4) வாகனங்களை விற்பனை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மாசுக் கட்டுப்பாட்டுத் தர நிர்ணயத்துக்கான கொள்கையான பிஎஸ் - 4-இன் விதிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது. அடுத்ததாக பிஎஸ்-5 விதிகள் 2020 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வர இருக்கிறது. எனவே, மாசுக் கட்டுப்பாட்டுத் தர நிர்ணயத்தின் பழைய விதிகளின்படி தயாரிக்கப்பட்ட வாகனங்களை குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு விற்பனை செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, பிஎஸ்-4 விதிகளின்படி 2020 மார்ச் 31-ஆம் தேதி வரை வாகனங்களைத் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
மத்திய அரசு தரப்பும் இதற்கு ஆதரவாகவே இருந்தது. பிஎஸ்-4 விதிகளின்படி தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்ய 2020 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு 3 முதல் 6 மாதங்கள் வரை வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் இந்த வழக்கில் காற்று மாசுபாடு பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் அபராஜித் சிங், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்குர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பளித்தது. அதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.
இதற்காக மாசுக் கட்டுப்பாட்டு தர நிர்ணய கொள்கையை உறுதியாக பின்பற்ற வேண்டும். எனவே, 2020 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்தனர்.
முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி பிஎஸ்-4 விதிகள் அமலுக்கு வந்தன. அப்போதும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உறுதியான உத்தரவு பிறப்பித்தது. எனவே, அந்த தேதிக்கு முன்பு பிஎஸ்-3 விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்துவிட வேண்டிய கட்டாயம் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் தள்ளுபடி விலையில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com