இந்தியா

பொருளாதார வளர்ச்சி 8.2%-ஆக அதிகரிப்பு: அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பெருமிதம்

DIN


பிரதமர் மோடி தலைமையிலான அரசின் துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 15 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
இதுகுறித்து அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மோடி பிரதமராகப் பொறுப்பேற்றபோது, நாட்டின் பொருளாதாரம் கவலையளிக்கும் நிலையில் இருந்தது. ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் ஒட்டுமொத்த அமைச்சரவையும் செயல்பட்டது. அதன்பலனாக, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சியால் சாமானியர்கள் அதிக பலனடைவார்கள். அவர்களின் கனவுகள் நிறைவேறும். மோடி தலைமையின் கீழ் உருவாகும் புதிய இந்தியாவில், முன்பைக் காட்டிலும் அதிகமான மக்கள் அதிகாரம் பெறுவர். இதற்காக, பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
இதேபோல், மோடி தலைமையிலான அரசு எடுத்த துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளால் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். மோடியின் தலைமையின் கீழ் உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா தொடர்ந்து முன்னேறும் என்று மற்றொரு மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி கூறினார்.
சிதம்பரம் கருத்து: இதனிடையே, இந்தப் பொருளாதார வளர்ச்சி அடுத்தடுத்த காலாண்டுகளில் தொடர வாய்ப்பில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
முதல் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும், மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் இந்தப் பொருளாதார வளர்ச்சி தொடர வாய்ப்பில்லை. கடந்த ஆண்டைப் போல், மூன்றாவது, நான்காவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. இதேபோல், வருடாந்திர பொருளாதார வளர்ச்சியும் கடந்த ஆண்டைவிட குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்கலாம். எனினும், நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT