வியாழக்கிழமை 22 நவம்பர் 2018

அருங்காட்சியகத்தில் இருந்து ஹைதராபாத் நிஜாமின் தங்க டிபன் பாக்ஸை திருடி அதில் உணவு சாப்பிட்ட திருடன்

DIN | Published: 11th September 2018 02:45 PM


ஹைதராபாத் நிஜாமின் தங்க டிபன் பாக்ஸ், அருங்காட்சியத்தில் இருந்து கடந்த வாரம் காணாமல் போன நிலையில், அதனைத் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஹைதராபாத் நிஜாமின் வைரக் கற்கள் பதிக்கப்பட்ட நான்கு அடுக்கு தங்க டிபன் பாக்ஸ் கடந்த வாரம் கொள்ளை போனது.

மிக மோசமான பாதுகாப்புக் குறைபாடு காரணமாகவே பல கோடி மதிப்புள்ள தங்க டிபன் பாக்ஸ் காணாமல் போனதாக கடும் விமரிசனங்கள் எழுந்தன.

இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் மெஹத் கௌஸ் பாஷா, மொஹத் முபீன் ஆகிய இரண்டு பேரைக் கைது செய்து, டிபன் பாக்ஸையும் பறிமுதல் செய்துள்ளது.

இவர்கள் மிகவும் சாமர்த்தியமாக திட்டம் தீட்டி, 45 நாட்களுக்கு முன்பு அருங்காட்சியகத்துக்கு வந்து டிபன் பாக்ஸை பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர்.

பிறகு வென்டிலேஷன் வழியாக உள்ளே நுழைந்து விலைமதிப்பில்லாத இந்த தங்க டிபன் பாக்ஸை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கயிறில் 30 முடிச்சுகள் போட்டு அதன் வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். இந்த திட்டத்தை முபீனே தீட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. 

அப்பகுதியைச் சேர்ந்த குற்றவாளிகளில்  இவர்கள் இரண்டு பேரும் மாயமானதால் இவர்களை கண்காணித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த டிபன் பாக்ஸுடன் தங்க ஸ்பூனையும் திருடிச் சென்று அதனை சந்தையில் விற்க முயன்றுள்ளனர். நல்ல விலை கிடைக்காததால் தங்களுடன் வைத்திருந்தனர்.

பல கோடி மதிப்புள்ள இந்த டிபன் பாக்ஸை ஹைதராபாத் நிஜாம் உணவு அருந்த பயன்படுத்தினாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், திருடர்களில் ஒருவன் தினமும் அதில்தான் உணவு சாப்பிட்டு வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

More from the section

முதுகலை பட்டதாரிகளுக்கு தில்லி ஐஐடி-ல் வேலை 
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கப்பல் பணிமனையில் வேலை
கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
வரதட்சணைக்கான சண்டையில் எதிர்த்துப் பேசிய மனைவியின் நாக்கை அறுத்து கணவன் கொடூரம்!
கஜா புயல் பாதிப்பு: தமிழக அரசு ரூ.14 ஆயிரம் கோடி நிதி கேட்டிருப்பதாக தகவல்