வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

கட்டண விதி மீறல்: சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

DIN | Published: 11th September 2018 01:20 AM


உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, திருத்திய விடைத்தாள்களைப் பெறுவதற்கு அதிக கட்டணம் விதித்ததற்காக, சிபிஎஸ்இக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், திருத்திய விடைத்தாள்களை கேட்டு பெறுவது மாணவர்களது அடிப்படை மற்றும் சட்டப்பூர்வ உரிமை என்றும், அதனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ-யில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விடைத்தாள்களை கோரும் போது, அந்த சட்டத்தில் எவ்வளவு கட்டணம் கூறப்பட்டுள்ளதோ அதை மட்டும் செலுத்தினால் போதுமானது' என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தியும், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ரூ.1200 கட்டணமாக செலுத்தியும் திருத்தப்பட்ட விடைத்தாள்களைப் பெறலாம் என்று சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையைக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, சிபிஎஸ்இ அதிக கட்டணம் வசூலிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவின் சின்ஹா மற்றும் கே. எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக, சிபிஎஸ்இ-க்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பினர். மேலும், தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்கக் கோரி சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டனர்.

More from the section

கேரள வெள்ள பாதிப்பு: ஜிஎஸ்டியில் கூடுதல் வரி மூலம் நிதி திரட்ட மத்திய அரசு திட்டம்
ராணுவ வீரர்களின் ரத்தத்திற்கு பிரதமர் அவமரியாதை - ரஃபேல் விவகாரத்தில் ராகுல் தாக்கு
அக்டோபர் 15-ல் கண்டிப்பாக ஆஜராகாவிட்டால் நடவடிக்கை: சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை  
வாராக் கடன் விவகாரம் - மத்திய அரசு மீது ப.சிதம்பரம் சாடல்
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்க பொதுநல வழக்கு