சனிக்கிழமை 17 நவம்பர் 2018

அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள்: சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக 11 மாநிலங்கள் அறிவிக்கை வெளியீடு

DIN | Published: 12th September 2018 02:38 AM


அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பான அறிவிக்கைகளை 11 மாநிலங்கள் வெளியிட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பான அறிவிக்கைகளை 11 மாநிலங்கள் வெளியிட்டுள்ளன. இதன்படி, தில்லியில் 2 சிறப்பு நீதிமன்றங்கள், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம், தமிழகம், உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தலா 1 சிறப்பு நீதிமன்றங்களையும் அமைக்கவுள்ளன.
இந்த 12 சிறப்பு நீதிமன்றங்களில், 6 நீதிமன்றங்கள் குற்றவியல் நீதிமன்றங்கள் மட்டத்திலானவை. 5 நீதிமன்றங்கள், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மட்டத்திலானவை. தமிழகத்தில் அமைக்கப்பட இருக்கும் நீதிமன்றம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
ஒட்டுமொத்த மாநிலமும் இந்த சிறப்பு நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்குள் வரும். மத்திய அரசிடம் இருக்கும் புள்ளிவிவரப்படி, இந்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு 1233 வழக்குகள் மாற்றப்பட உள்ளன. 136 வழக்குகள் முடித்து வைக்கப்பட இருக்கின்றன என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார். அதில் அவர், சிறை தண்டனை முடிந்து திரும்பும் அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகளாக அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான 1,581 வழக்குகளில் எத்தனை வழக்குகள் ஓராண்டு காலத்துக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது என கேள்வியெழுப்பியிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ரூ.7.8 கோடி செலவில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

More from the section

சபரிமலை திட்டத்தை கைவிட்டார் த்ருப்தி தேசாய்? புணேவுக்கு திரும்புவதாக தகவல்
சபரிமலை விவகாரம்: பெண்ணியவாதி த்ருப்தி தேசாய் 10 மணி நேரத்துக்கும் மேலாக கொச்சி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது சிவிசி 
மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரம்: பிரதமர், முதல்வர் மீது ராகுல் குற்றச்சாட்டு
சிபிஐ, ஆர்பிஐ போன்ற அரசு அமைப்புகளை சிதைத்து வரும் பாஜக: மம்தா பானர்ஜி கடும் தாக்கு