வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

எனது சிகாகோ பயணம் ரத்து செய்யப்பட்டதில் மத்திய அரசு சதி: மம்தா குற்றச்சாட்டு

DIN | Published: 12th September 2018 12:55 AM
மேற்கு வங்கத்தில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் புத்தகம் ஒன்றை மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரானந்தா வெளியிட அதை பெற்றுக்கொள்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி.


எனது சிகாகோ பயணம் ரத்து செய்யப்பட்டதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சதி அடங்கியிருக்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரை நிகழ்த்தி 125 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பேலூர் ராமகிருஷ்ணா மடத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் மம்தா பங்கேற்று பேசியதாவது:
சிகாகோவில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச ஹிந்து மாநாட்டில் பங்கேற்க இருந்தேன். ஆனால், சிலரின் சதிச் செயலால் என்னால் அந்த மாநாட்டில் பங்கேற்க இயலவில்லை. அது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது என்றார் அவர்.
பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் மம்தா மேலும் பேசியதாவது:
அனைவராலும் தலைவராகி விட முடியாது. ஒரு தலைவருக்கு எவ்வாறு தியாகம் செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். ஒரு தலைவர், தமது நாட்டுக்காகவும், நாட்டுமக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மை அடிப்படையானது என்பதை ஹிந்துத்துவம் போதிக்கிறது. யாரிடம் இருந்தும் ஹிந்துத்துவத்தை நான் கற்றுக் கொள்ள விரும்பவில்லை. என்னுடைய மதத்தை பற்றி எனக்கு தெரியும்.
ஒருவர் என்ன உண்ண வேண்டும்; எங்கு தங்க வேண்டும்; என்ன செய்ய வேண்டும் என்று போதிப்பது அவமானகரமானது.
மதம் சார்ந்து எதையும் வற்புறுத்தக் கூடாது. சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை, ஒற்றுமை ஆகியவற்றை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் மம்தா பானர்ஜி.
இதனிடையே, விவேகானந்தா பல்கலைக்கழகத்துக்கு ரூ.1.5 கோடியும், ராமகிருஷ்ண மடத்தின் புதிய மையத்தை நியூ டவுனில் அமைக்க ரூ.10 கோடியும் அளிக்கப்படும் என்று மம்தா அறிவித்தார்.


 

More from the section

கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த விநோத உத்தரவு: என்ன செய்யப்போகிறது பெங்களூரு மாநகராட்சி?
2030-க்குள் 21 அணு உலை அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி துறை செயலர் சேகர் பாசு
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு
மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: மோடிக்கு இம்ரான் கான் கடிதம்
ஆணவக் கொலை முயற்சி: அந்தஸ்துதான் முக்கியமென வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை போலீஸில் சரண்