புதன்கிழமை 14 நவம்பர் 2018

ஒரு டெய்லரின் மறுபக்கம்: 8 ஆண்டுகளில் 33 பேரைக் கொன்ற கொடூரன் 

ENS | Published: 12th September 2018 04:39 PM


மத்தியப் பிரதேசத்தில் டிரக் ஓட்டுநர்களின் மர்ம மரணம் குறித்து விசாரித்து வந்த காவல்துறையினர் ஒரு அப்பாவி தையல்காரரை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையின் போது, டிரக் ஓட்டுநர்களின் கொலை குறித்து இந்த தையல்காரரிடம் ஏதேனும் ஒரு துப்புக் கிடைத்தால் போதும் என்றுதான் நினைத்திருப்பார்கள் காவலர்கள். ஆனால், அந்த துப்பே அவர்தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

விசாரணையில் வெளிவந்த தகவல்களால் ஆடிப்போனது காவல்துறை.  அப்படி என்ன சொல்லியிருப்பார் அவர்..

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளில்  மட்டும் 33 டிரக் ஓட்டுநர்களைக் கொலை செய்து அவர்கள் ஓட்டி வந்த டிரக்கில் வரும் பொருட்களை கொள்ளையடித்து விற்பனை செய்து வந்ததும், பல்வேறு மாநிலங்களில் செயல்படும் கூலிப் படைகளில் ஊதியத்துக்கு வேலை செய்து பலரைக் கொலை செய்திருப்பதும் அந்த அப்பாவி தோற்றத்தில் இருந்த தையல்காரர்தான் என்பதே அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிய வந்த அதிர்ச்சித் தகவல்.

ஆதேஷ் காம்ப்ரா (48) என்ற அந்த தையல்காரர் தனது குடும்பத்தைக் காப்பாற்ற துணிகளைத் தைத்து  வேலை செய்து வருகிறார்.

இவர் அப்பகுதிக்கு வரும் டிரக் ஓட்டுநர்களுடன் சிநேகமாகி, அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் போது அதில் போதை மருந்தைக் கலந்து கொடுத்து விடுவார். அவர்கள் ஆழ்ந்து உறங்கியதும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குக் கொண்டு சென்று அவர்களைக் கொன்றுவிட்டு, அவர்கள் ஓட்டி வந்த டிரக்கில் இருக்கும் பொருட்களை கொள்ளையடித்து, விற்றுப் பணம் சம்பாதிப்பது வாடிக்கை.

ஆரம்பத்தில் கூலிப்படையில் சேர்ந்து ஒரு கொலைக்கு ரூ.50 ஆயிரம் பணம் சம்பாதித்து வந்த காம்ப்ரா, தனது மகன் ஒரு சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில், அவனுக்கு சிகிச்சை அளிக்க தனியாகவே கொலை, கொள்ளையிலும் ஈடுபட்டது தெரிய வந்தது.

விசாரணையில், தையல்கடைக்காரராக இருந்த காம்ப்ரா மீது சந்தேகம் வந்தாலும், அவரது எளிய, அமைதியான சுபாவம் மற்றும் அப்பாவியான தோற்றம், சந்தேகங்களை தகர்த்தெறிந்திருக்கிறது.

ஆனால் விசாரணையின் போது அவர் சொன்னத் தகவல்களைக் கேட்டு ஆடிப்போன காவல்துறையினர், மனநல மருத்துவர்களின் உதவியோடு அவரிடம் தீவிர விசாரணை நடத்தி மேலும் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
 

More from the section

காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் வேண்டாம், இந்தியாவுக்கும் வேண்டாம்: முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி
சபரிமலை கோயிலில் வரும் 17-ஆம் தேதி தரிசனம்: பாதுகாப்பு வழங்கக்கோரி கேரள முதல்வருக்கும், பிரதமருக்கும் பெண்ணியவாதி கடிதம்
நதிகளை மாசுபடுத்தியற்காக பஞ்சாப் அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் 
டிசம்பர் 11ம் தேதி முதல் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர்
மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம்: மத்திய அரசு மீது மம்தா சாடல்