வியாழக்கிழமை 18 அக்டோபர் 2018

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: நவம்பர் 15-இல் இறுதி அறிக்கை தாக்கல்

DIN | Published: 12th September 2018 01:11 AM


மகாராஷ்டிர மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோரின் சமூகப் பொருளாதார நிலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, வரும் நவம்பர் 15-ஆம் தேதி தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில், அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான குழுவானது தனது இறுதி அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் மராத்தா பிரிவினர் சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணை, உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம். சாவந்த் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாராஷ்டிர அரசின் சார்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர் ரவி கதம் தெரிவித்ததாவது:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான குழுவானது பல்வேறு அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கிராம பஞ்சாயத்துகள், சமூக மற்றும் சட்டம் சார்ந்த அமைப்புகள் ஆகியவற்றிலிருந்து சேகரித்த தகவல்களை ஆராய்ந்து வருகிறது. 
இது வரை 45,000 மராத்தா சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களின் தகவல்கள் ஆராயப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பான மதிப்பீடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குழுவானது தகுந்த பரிந்துரைகளுடன் கூடிய தனது இறுதி அறிக்கையை வரும் நவம்பர் 15-ஆம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கதம் தெரிவித்தார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் மராத்தா சமூகத்தினர் போராடி வந்த நிலையில், மாநிலத்திலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக மற்றும் பொருளாதார நிலையை ஆராய, மகாராஷ்டிர அரசு குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. 
மேலும், அந்தக் குழுவின் இறுதி அறிக்கை அடிப்படையில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கப்படும் என்றும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

More from the section

மெஹூல் சோக்ஸி உள்ளிட்டோரின் ரூ.218 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
கட்சிகளுக்கு நன்கொடை: விதிகளைத் திருத்த சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள்; ஒரு போலீஸ்காரர் பலி
ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த ஜஸ்வந்த் சிங் மகன்
உ.பி.யில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் இணைய தயார்