செவ்வாய்க்கிழமை 18 செப்டம்பர் 2018

ரஃபேல் ஊழலை மறைக்க அதிகாரிகளை பயன்படுத்துகிறது மத்திய அரசு: யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

DIN | Published: 12th September 2018 12:50 AM


பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்ற முறைகேட்டை ராணுவ அதிகாரிகளைக் கொண்டு மறைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது' என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டினார்.
இதே குற்றச்சாட்டை இவருடன் சேர்ந்து மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோரும் முன்வைத்தனர்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மூன்று பேரும் பங்கேற்று கூறியதாவது:
126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அந்த எண்ணிக்கை 36-ஆகக் குறைக்கப்பட்டது.
ரஃபேல் போர் விமானம் அழகானது என்று விமானப் படை துணைத் தலைவர் எஸ்.பி.தியோ கூறியதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஏன் விமானங்களின் எண்ணிக்கை 36-ஆகக் குறைக்கப்பட்டது என்று தெரியவில்லை.
இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் மூலம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனம் அந்த விமானங்களை தயாரித்திருக்கும். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் தயாரிப்பு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியே இதற்குக் காரணம்.
ஆனால், இந்த உண்மையை மறைக்க விமானப் படை அதிகாரி தற்போது பயன்படுத்தப்படுகிறார். விமானப் படைதான் 36 போர் விமானங்களை வாங்குமாறு கூறியதாக தற்போது எஸ்.பி.தியோ கூறுகிறார். அவரது வார்த்தையில் உண்மையில்லை. மத்திய அரசுதான் இவ்வாறு பொய்யுரைக்குமாறு அவரை அறிவுறுத்தியிருக்கிறது. பிரான்ஸில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு முன்பு விமானப் படை இந்தத் தகவலை தெரிவிக்கவில்லை.
இந்த முறைகேட்டை பாதுகாக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் முனைகிறார்.
வெறும் 36 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதன் மூலம், தேசத்தின் பாதுகாப்பில் மோடி சமரசம் செய்துகொண்டுள்ளார்.
போபர்ஸ் ஊழலை விட மிகப் பெரிய ஊழலான ரஃபேல் ஊழலை தலைமை கணக்குத் தணிக்கையாளரின் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று அவர்கள் மூன்று பேரும் தெரிவித்தனர்.
 

More from the section

மக்கள்தான் எனக்கு எஜமானா்கள்: வாராணசியில் பிரதமா் மோடி நெகிழ்ச்சி
இஸ்ரோ உளவு விவகாரம்; களங்கம் நீங்கியதை அறியாமலேயே காலமான விஞ்ஞானி 
ரூ.8 கோடி கறுப்புப் பணம்: கர்நாடக அமைச்சர் மீது அமலாக்கத்துறை வழக்கு
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினம்: இலச்சினை வெளியீடு 
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பேராயரின் முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு