புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

ரஃபேல் விமானக் கொள்முதலில் மத்திய அரசின் முடிவு சரி:  விமானப் படைத் தலைமைத் தளபதி

DIN | Published: 12th September 2018 08:09 PM

 

பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை கொள்முதல் செய்யும் மத்திய அரசின் முடிவு சரியானதுதான் என்று விமானப் படைத் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா கூறினாா்.

பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 126 ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வந்தது. ஆனால், அது தொடா்பாக ஒப்பந்தம் எதுவும் இறுதிசெய்யப்படவில்லை.

பின்னா் ஆட்சிக்கு வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.58,000 கோடியில் 36 ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் 23-ஆம் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி, ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் இந்தியாவிடம் ஒப்படைக்கத் தொடங்கும்.

இதனிடையே, இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. 

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விமானப் படை மறுசீரமைப்பு தொடா்பான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பி.எஸ்.தனோவா, 

36 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்யும் மத்திய அரசின் முடிவு சரியானது தான். விமானப் படையில், ஒரு படைப் பிரிவுக்கு 16 முதல் 18 போா் விமானங்கள் வரை தேவைப்படும். அதன்படியே, அவசரத் தேவைக்காக, பிரான்ஸிடம் இருந்து 2 படைப் பிரிவுகளுக்குத் தேவையான அளவில் 36 ரஃபேல் போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் கூட விமானப் படையில் போா் விமானங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது, அவசர தேவைக்காக, இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் நடைபெற்றுள்ளது.

போா் விமானங்கள் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகின்றன. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரண்டு அண்டை நாடுகளிடமும் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்காக, நமது விமானப் படைக்குத் தேவையான விமானங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டியுள்ளது.

இந்தியாவைப் போன்று வேறு எந்த நாடும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளவில்லை. சீனா போன்ற அண்டை நாடுகள், தங்களது விமானப் படை ஆயுதங்களை நவீனப்படுத்திக் கொண்டே இருக்கின்றறன. அதை ஈடு செய்யும் அளவில், இந்திய விமானப் படையை வலிமைப்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

More from the section

எந்த ஒரு கட்சிக்கும் பணியாற்றும்படி தொண்டர்களை ஆர்எஸ்எஸ் வலியுறுத்துவதில்லை
மக்கள்தான் எஜமானர்கள்: வாராணசியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதே அரசியல் கட்சிகளின் வாடிக்கை
ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: ஹெச்ஏஎல் நிறுவனம் விடுபட்டதற்கு காங்கிரஸ் கூட்டணி அரசுதான் காரணம்
ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: உண்மைகளை மறைக்கிறார் நிர்மலா சீதாராமன்