திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

பாலியல் புகாரில் பேராயர் ஆஜராக வேண்டும்: கேரள காவல்துறை சம்மன்

DIN | Published: 13th September 2018 12:42 AM


கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராயர், விசாரணைக்காக வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பேராயருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தலைவர் விஜய் சாகரே புதன்கிழமை தெரிவித்தார்.
ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் பிரான்கோ முல்லகல், தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இந்நிலையில், புகார் தொடர்பாக விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்குமாறு மாநில அரசுக்கு, கேரள உயர் நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உத்தவிட்டது.
இதற்கிடையே, பேராயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிறிஸ்தவ மதத்தின் தலைமையகமான வாடிகனுக்கு அந்த கன்னியாஸ்திரி கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், பேராயர் தனது பணம் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறார். அவரை பேராயர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். உண்மைக்கு எதிராக தேவாலயம் கண்ணை மூடிக் கொண்டுள்ளது. நான் இழந்ததை தேவாலயத்தால் திருப்பித் தர முடியுமா?'' என்று கன்னியாஸ்திரி குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சூழலில், பேராயருக்கு எதிரான வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, கேரள காவல்துறை உயர் அதிகாரிகள், துறை தலைவர் விஜய் சாகரே தலைமையில் கொச்சியில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேராயருக்கு சம்மன் அனுப்புவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
நெருக்கடி: பேராயர் பிரான்கோ முல்லகல் பதவி விலகிவிட்டு சட்ட விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எம்.சுதீரன் வலியுறுத்தியுள்ளார்.
அதே சமயம், பேராயர் மீது புகார் குறித்த கன்னியாஸ்திரியை இழிவாக விமர்சனம் செய்திருந்த கேரள எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ், தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

More from the section

சன்னிதானத்தில் பிரச்னையை உண்டாக்க ஆர்எஸ்எஸ் முகாம்: கேரள முதல்வர் குற்றச்சாட்டு
சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள பாஜக எடுத்திருக்கும் அதிரடி வியூகம் பலனளிக்குமா?
உர்ஜித் படேல் மற்றும் அவரது குழுவுக்கு முதுகெலும்பு உள்ளது என்று நினைக்கிறேன்: ஆர்பிஐ கூட்டம் குறித்து ராகுல் டிவீட் 
தண்டவாளத்தில் படுத்து நூலிழையில் உயிர் பிழைத்த ஆந்திர நபர்
சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி இடமாற்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு