வியாழக்கிழமை 22 நவம்பர் 2018

மல்லையா-ஜேட்லி சந்திப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்

DIN | Published: 13th September 2018 12:43 AM


இந்தியாவைவிட்டு வெளியேறும் முன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாக தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், மல்லையா தெரிவித்த விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. இதுதொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு பிரதமர் மோடி உடனடியாக உத்தரவிட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், அருண் ஜேட்லியிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்டு மல்லையா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்' என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், நீரவ் மோடி, நாட்டைவிட்டு தப்பும் முன்பு பிரதமர் மோடியை சந்தித்திருக்கிறார். மல்லையா நாட்டைவிட்டு தப்பும் முன் நிதியமைச்சர் ஜேட்லியை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்புகளில் என்ன விவாதிக்கப்பட்டது? அதனை அறிய மக்கள் விரும்புகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி வெளியிட்ட பதிவில், பெரும் தொழிலதிபர்கள், நமது நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, வெளிநாடு தப்புவதற்கு மோடி அரசு உதவியிருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது' என்று கூறியுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஊழல்வாதிகளுடனும், தலைமறைவு குற்றவாளிகளுடனும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கூட்டு வைத்துக்கொண்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளது' என்று விமர்சித்துள்ளார்.

 

More from the section

பஞ்சாப் குண்டுவீச்சு சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது: அம்ரீந்தர் சிங் குற்றச்சாட்டு 
நாடு முழுவதும் விரைவில் 1.15 லட்சம் வங்கி ஏ.டி.எம்.களுக்கு மூடு விழா? : அதிர்ச்சித் தகவல்
மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு 
பணமதிப்பிழப்பு நடவடிக்கை கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை பாதித்துள்ளது: ராகுல்
சந்திரபாபு நாயுடுவும், சோனியா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரமா? காங்கிரஸ் மறுப்பு