இந்தியா

தொண்டர்களை மதித்தால்தான் பதவி: மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி

DIN


கட்சித் தொண்டர்களை மதிப்பவர்கள் மட்டுமே அமைச்சர் அல்லது முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். தொண்டர்களுக்காக நேரத்தை செலவிடாதவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். போபால் நகரில் உள்ள பெல் தொழிற்சாலையின் தசரா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எவர் ஒருவர் அமைச்சர் பதவிக்கு வந்தாலும், முதல்வர் பதவிக்கு வந்தாலும், அவர்கள் கட்சியின் தொண்டர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். கட்சித் தொண்டர்களுக்காக அவர்களின் கதவுகள் திறக்கப்படாவிட்டால், அடுத்த 15 நிமிடங்களுக்குப் பிறகு பதவியில் இருக்க மாட்டார்கள். தொண்டர்களுக்காக நேரத்தை செலவிடாதவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது. ஏனெனில், கட்சிக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தியவர்கள் தொண்டர்கள்.
அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். அதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. கட்சியின் உண்மையான தொண்டர்களுக்கும், மகளிருக்கும் மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். தலைவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.
மிகப்பெரிய ஊழல்: கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். மோடி அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மிகப்பெரிய ஊழலாகும். நாட்டின் 15 செல்வந்தர்களுக்கு கொடுப்பதற்காக, சிறு வணிகர்களிடம் இருந்த பணம் பறிக்கப்பட்டது. 
வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்காக, நேர்மையானவர்கள் மட்டுமே வரிசையில் காத்துக் கிடந்தனர். மோசடி பேர்வழிகள் யாரையும் வரிசையில் பார்த்திருக்க முடியாது. கருப்புப் பணத்தை வெள்ளையாக்க வேண்டும் என்பதற்காகவே, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டது. சிறு வணிகர்களை முடக்குவதற்காகவே சரக்கு-சேவை வரி விதிப்பையும் மத்திய அரசு அமல்படுத்தியது. 
தொழிலதிபர்களுக்கு கடனாக வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வாராக்கடனாகி விட்டன. அவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆனால், 5,000 ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாத விவசாயி, ஏமாற்றுக்காரர், திருடர் என்று முத்திரை குத்தப்படுகிறார். 15 தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.1.5 லட்சம் கோடி கடனை பாஜக தலைமையிலான அரசு தள்ளுபடி செய்து விட்டது.
நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகளின் ஒட்டு மொத்த கடனும் தள்ளுபடி செய்யப்படும்.
ரஃபேல் ஊழல்: ரஃபேல் போர் விமானத்தை கூடுதல் விலைக்கு வாங்குவது ஏன் என்று மக்களவையில் நான் கேள்வி எழுப்பினேன். அப்போது, அவையில் இருந்த மோடி, சுற்றும் முற்றும் நாலாபுறமும் பார்த்தார். அவரால் என்னை நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லை. என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், செல்லிடப்பேசி உள்ளிட்ட சாதனங்கள், மத்தியப் பிரதேசத்திலேயே தயாரிக்கப்படும். இதனால், மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வியாபம் ஊழல், டெண்டர் முறைகேடு ஆகியவற்றில் ஈடுபட்டவர்களை, மல்லையாவைப் போல் தப்பித்துச் செல்ல விடமாட்டோம் என்றார் ராகுல் காந்தி.
மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக, தில்லியில் இருந்து போபால் விமான நிலையத்தை திங்கள்கிழமை வந்தடைந்த ராகுல் காந்தியை மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத், கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர், லால்காத்தி பகுதியில் இருந்து பேருந்தில் பயணம் செய்து, ராகுல் காந்தி தனது பிரசாரத்தை தொடங்கினார். 11 ஹிந்து குருக்கள் பூஜை செய்து, அவருக்கு ஆசி வழங்கினர். பேருந்தில் முன்பகுதியில் அமர்ந்திருந்த ராகுல் காந்தியைக் காண்பதற்கு ஆயிரக் கணக்கான தொண்டர்கள் சாலையின் இரு புறமும் திரண்டிருந்தனர். ராகுல் காந்தியை சிவ பக்தராக வர்ணித்து நகரின் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற வாகனம், 4 மணி நேர பயணத்துக்குப் பிறகு 15 கி.மீ. தொலைவைக் கடந்து பெல் நிறுவனத்தின் தசரா மைதானத்தை வந்தடைந்தது. பயணத்துக்கு நடுவே சாதர் மஞ்சில் என்ற இடத்தில் ஒரு சாலையோரக் கடையில் ராகுல் காந்தி தேநீர், சமோசா சாப்பிட்டார். பின்னர், தேநீர் கடைக்காரருடன் சுயப்படம் எடுத்துக் கொண்டார். அவரது வருகையையொட்டி, பாதுகாப்புப் பணியில் கூடுதலாகப் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT