தருண் அகர்வால் குழுவிடம் முறையிட வேதாந்தா குழுமத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையைப் பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் செவ்வாய்க்கிழமை கோரப்பட்டது


ஸ்டெர்லைட் ஆலையைப் பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் செவ்வாய்க்கிழமை கோரப்பட்டது. இது தொடர்பாக, ஸ்டெர்லைட் விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழுவிடம் கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது. 
ஸ்டெர்லைட் விவகாரத்தை முழுமையாக விசாரிக்கும் குழுவின் தலைவராக பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஜே. வஜீஃப்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இக்குழுவின் தலைவராக மேகாலயா மாநில உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அதன் தலைவரும், நீதிபதியுமான ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு முன் செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா குழுமத்தின் சார்பில் வழக்குரைஞர் ரோஹிணி மூஸா ஆஜராகி, ஆலையில் நிர்வாகப் பணிகள், பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கும், மூலப்பொருள்களை எடுப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டும்' என கோரப்பட்டது.
அப்போது, நீதிபதி ஏ.கே. கோயல், இது தொடர்பான கோரிக்கையை இதற்கென அமைக்கப்பட்ட குழுவிடம் அளிக்குமாறு உத்தரவிட்டார். அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், தமிழக அரசின் சார்பில் சில கோரிக்கைகளை அளிக்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரி தனது வாதத்தை கடுமையாக முன்வைத்தார். எனினும், இது தொடர்பாக நீதிபதி அமர்வு உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com