தேர்தல் ஆணையத்தை குறை கூறுவதே அரசியல் கட்சிகளின் வாடிக்கை

தேர்தல் களத்தில் கடுமையான போட்டிகள் நிலவும் தருணங்களில் எல்லாம் அதை திசைதிருப்ப அரசியல் கட்சிகள், தங்களின் மீது சந்தேகம் எழுப்புவதையும் குறைகூறுவதையும்
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர்
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர்


தேர்தல் களத்தில் கடுமையான போட்டிகள் நிலவும் தருணங்களில் எல்லாம் அதை திசைதிருப்ப அரசியல் கட்சிகள், தங்களின் மீது சந்தேகம் எழுப்புவதையும் குறைகூறுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் நேர்மையை பறைசாற்ற எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிúஸாரம் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி, அந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையம் முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு இரு நாள் பயணமாக திங்கள்கிழமை சென்ற ஓ.பி.ராவத், அங்குள்ள அரசியல் கள நிலவரங்கள், வாக்காளர்களின் குறைகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில், மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை அவர் சந்தித்தார். 
அப்போது கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராவத் அளித்த பதில்: அனைத்து தேர்தல்களிலும் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற நோக்கத்தை மையமாக வைத்துதான் தேர்தல் ஆணையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி, ராஜஸ்தானிலும் அந்த இலக்கை நோக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
போலி வாக்காளர்கள் பிரச்னைகளைக் களைய பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியிருப்பது தொடர்பாக கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விரைவில் போலி வாக்காளர்களே இல்லாத நிலை மாநிலத்தில் எட்டப்படும்.
அதேபோன்று தேர்தலில் கருப்புப் பண புழக்கத்தைத் தடுப்பதற்கான கண்காணிப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வேட்புமனுத் தாக்கலில் தவறான தகவல்களை சமர்ப்பிக்கும் வேட்பாளர்கள் மீது வருமான வரித் துறையின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே தேர்தல் களம் கடினமாக இருக்கும்போது, எங்களின் மீது சந்தேகங்களை எழுப்புவதும், குறைகளைக் கூறுவதும் வழக்கமான ஒன்று. அரசியல் கட்சிகள் முன்வைக்கும் அத்தகைய புகார்களை தேர்தல் ஆணையம் எதிர்கொள்வதுடன், நேர்மையை நிரூபிப்பதற்காக எந்த சவாலையும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கிறது என்றார் ராவத்.
ஒரே நேரத்தில் தேர்தல்: இதனிடையே, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ராவத் அளித்த பேட்டியில் மக்களவைக்கும், மாநில பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவினங்கள் குறையுமா? என்பது குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தற்போது 20 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளன. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் கூடுதலாக 10 லட்சம் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கு ரூ.1,700 கோடி செலவாகும். அதேவேளையில், பிரசார செலவுகள், பாதுகாப்பு செலவுகள் உள்ளிட்டவை குறையும். எவ்வாறாயினும், இதுதொடர்பாக உரிய ஆய்வு நடத்திய பிறகே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவுகள் குறையுமா? அல்லது அதிகரிக்குமா? என்பது தெரிய வரும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com