பணமோசடி விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் மீது வழக்குப்பதிவு

வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்தது ஆகியவை தொடர்பாக கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் அவருடைய
பணமோசடி விவகாரத்தில் கர்நாடக அமைச்சர் மீது வழக்குப்பதிவு


வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் செய்தது ஆகியவை தொடர்பாக கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
பணமோசடியில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், கர்நாடக அமைச்சர் சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் நால்வர் மீது, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, அவர்களுக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பப்பட உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
வரி ஏய்ப்பு மற்றும் கோடிக்கணக்கிலான ரூபாயை ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்தது உள்ளிட்ட விவகாரங்களில், கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமார், அவரின் கூட்டாளி நாராயண், தில்லியுள்ள கர்நாடக பவனில் பணி புரியும் ஹனுமந்தய்யா, கர்நாடக பவன் பாதுகாவலர் ராஜேந்திரா, ஷர்மா டிரான்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் எஸ்.கே. ஷர்மா ஆகியோர் மீது வருமான வரித்துறை இந்த ஆண்டு தொடக்கத்தில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஒன்றைத் தாக்கல் செய்தது. 
அந்தக் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
சிவகுமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு, கணக்கில் வராத பணத்தை, பெங்களூரு மற்றும் தில்லி பகுதிகளில் ஹவாலா முறையில் மாற்றி வந்துள்ளார். இந்தக் கணக்கில் வராத பணத்தை, தில்லியில் உள்ள கர்நாடக பவனில் சேமித்து வைத்து ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்ய ஹனுமந்தய்யா உதவியுள்ளார். சிவக்குமார் மற்றும் ஷர்மாவின் அசையா சொத்துகளை ராஜேந்திரா கவனித்து வந்துள்ளார். 
தில்லி மற்றும் பெங்களூரு பகுதிகளிலுள்ள சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கொண்ட சோதனையில், ரூ. 20 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு, திட்டமிட்ட வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது என்று குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வருமான வரித்துறையினர் திட்டமிட்டு தன்னைக் குறி வைப்பதாகக் குற்றம் சாட்டிய சிவகுமார், தன் மீதான குற்றச்சாட்டை சட்டப்பூர்வமாக சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சிவகுமாருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com