கோதாவரி புஷ்கரத்தில் 29 பேர் பலியான சம்பவம்: ஆந்திர அரசு மீது தவறு இல்லை

கடந்த 2015-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற கோதாவரி புஷ்கரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 29 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆந்திர மாநில அரசு மீது தவறு
கோதாவரி புஷ்கரத்தில் 29 பேர் பலியான சம்பவம்: ஆந்திர அரசு மீது தவறு இல்லை


கடந்த 2015-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற கோதாவரி புஷ்கரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 29 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆந்திர மாநில அரசு மீது தவறு இல்லை என்று விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்றபோது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அங்கு சென்று புனித நீராடினார். இதற்காக ஒரு படித்துறையில் மக்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனவேதான், கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஆந்திர உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சி.ஒய்.சோமைய்யாஜுலு தலைமையில் ஒரு நபர் குழுவை ஆந்திர அரசு அமைத்தது. அக்குழுவினர் அறிக்கை ஆந்திர சட்டப் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கோதாவரி புஷ்கரம் நடைபெற்றபோது, படித்துறையில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததுதான் நெரிசல் ஏற்படக் காரணம். சம்பவம் நடந்த நேரத்தில் முதல்வர் புனித நீராடிவிட்டுச் சென்றுவிட்டார். எனவே, இந்த விஷயத்தில் அவர் மீதோ, ஆந்திர மாநில அரசு மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதோ குறை கூற முடியாது. முதல்வர் மீது குற்றம்சாட்ட வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் தேவையற்ற விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.
இந்த விஷயத்தில் ஊடகங்கள், முதல்வரின் வருகை குறித்து தேவைக்கு அதிகமாக செய்திகளை வெளியிட்டு வந்தன. 
இதனால், முதல்வர் வந்த நேரத்தில் அங்கு கூட்டமும் அதிகமாகியுள்ளது. பல இடங்களில் ஊடகங்களின் மிகையான செயல்பாடுகளும் தவறுகளுக்கு வழி வகுத்துவிடுகின்றன.
ஆந்திர அரசு புஷ்கர விழாவுக்கான ஏற்பாடுகளை ஓராண்டுகளுக்கு முன்பு இருந்தே திட்டமிட்டு, சிறப்பாக செய்தது. இதற்காக ரூ.1,500 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com