ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: என்ன முறைகேடு..? ஏன் விவாதம்..?

பிரான்ஸ் நாட்டுடன் அண்மையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: என்ன முறைகேடு..? ஏன் விவாதம்..?

பிரான்ஸ் நாட்டுடன் அண்மையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 1989 தேர்தலில் போஃபர்ஸ் பீரங்கி' பேரம் பிரச்னையானதுபோல, இது 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சவாலாக அமையுமா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

1999-இல் நிகழ்ந்த கார்கில் போரின் போதுதான், ரஃபேல் போன்ற அதி நவீன விமானங்களின் தேவையை இந்தியா உணர்ந்தது. 1999, மே தொடக்கத்தில், கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி நிலை கொண்டது. அப்போது, 1989-இல் பிரச்னையான போஃபர்ஸ் பீரங்கிகள்தான், இந்திய ராணுவத்திற்குப் பேருதவியாக இருந்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கார்கில் ஊடுருவலின்போது, 1999, மே 26- இல் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக வான்வழித் தாக்குதலை இந்திய விமானப்படை தொடங்கியது.

ஆனால், அடுத்த நாளே, மிக்-21, மிக்-27 ஆகிய இரு போர் விமானங்களையும், அதற்கு அடுத்த நாள் எம்.ஐ.- 17 ரக ஹெலிகாப்டரையும் இந்திய விமானப்படை இழந்தது. அவை பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டன. கார்கிலில் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இருப்பினும் பாகிஸ்தான் ஊடுருவலில் இருந்து இந்தியப் பகுதிகளை நமது ராணுவம் 74 நாள்களில் மீட்டது. அப்போதுதான், ரஃபேல் போன்ற அதி நவீன போர் விமானங்களின் தேவையை வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு உணர்ந்தது. இதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படையைப் பலப்படுத்தும் நோக்கில் 126 அதி நவீன போர் விமானங்களை வாங்குவதற்கான பூர்வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


காங்கிரஸின் ஒப்பந்த முயற்சி: வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்குப் பிறகு 2004-14 வரை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்த விவகாரத்தில் மும்முரம் காட்டியது. 2007, ஆகஸ்ட் 28-இல் 126 போர் விமானங்களுக்கான முன்மொழிவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியிட்டது. இதன்படி, டஸால்ட் ஏவியேஷன், யூரோ ஃபைட்டர் உள்பட ஆறு சர்வதேச நிறுவனங்கள் மத்திய அரசிடம் கேட்பு விலையை முன்வைத்தன.

பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு டஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல், யூரோஃபைட்டர் நிறுவனத்தின் டைஃபூன் வகைப் போர் விமானங்கள் உகந்தவையாக இருக்கும் என இந்திய விமானப்படை 2011-இல் தெரிவித்தது. இதில் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் குறைந்த விலை கோரியிருந்ததால் அந்த நிறுவனத்துடன் 2012- இல் பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டது. 
ரூ.54,000 கோடி மதிப்பில், 126 விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும் அதில், 18 விமானங்கள் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டுப் பறப்பதற்குத் தயாரான நிலையில் இந்தியாவிடம் அளிக்கப்படும் என்றும், எஞ்சியுள்ள 108 விமானங்கள், தொழில்நுட்பப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் (ஹெ.ஏ.எல்.) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டன. மேலும், விமானங்கள் தொடர்பாக மட்டுமே விவாதிக்கப்பட்டன. விமானத்தில் பொருத்தப்படும் ஆயுதங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை. அதனால், பேச்சுவார்த்தையின் போது பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. 

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படவிருந்த 108 விமானங்களின் தரத்துக்கு டஸால்ட் நிறுவனம் பொறுப்பேற்க மறுத்தது. அதேசமயம், இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானங்களுக்காக டஸால்ட் நிறுவனம் சார்பில் மனித உழைப்பு 3 கோடி மணி நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தது . ஆனால், சுமார் 9 கோடி மணி நேரம் தேவைப்படும் என ஹெஏஎல் நிறுவனம் தெரிவித்தது. இதனால், டஸால்ட் - ஹெஏஎல் இடையே எழுந்த கருத்து முரண்பாடுகளால், ஜக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் 2014-ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.

பாஜக கூட்டணி ஆட்சியில் ரஃபேல் ஒப்பந்தம்: பின்னர் பாஜக கூட்டணி அரசு 2014-இல் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், இந்த விமானக் கொள்முதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்புக் கவனம் செலுத்தினார். பிரான்ஸுக்கு 2015, ஏப்ரல் 15- இல் விஜயம் செய்த மோடி, அந்நாட்டுஅரசிடம் இருந்து, ஆயுதங்கள் பொருத்தப்பட்டு பறப்பதற்கு தயார் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளதாக அறிவித்தார். 

இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது. இதில், விமானங்களை நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பையும் பிரான்ஸ் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சிலின் (Defence Acquisition Council)   
ஆலோசனைகளும் இந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுமார் ரூ.12,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், விமானத்தின் விலை விவரங்களை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்திலும், கொள்முதல் நடவடிக்கைகளிலும் இந்திய தரப்பில் இருந்து எந்தவொரு தனியார் நிறுவனமும் சம்பந்தப்படவில்லை என்றும் இது முழுக்க முழுக்க அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
புதிய ஒப்பந்தத்தில் தொழில் நுட்பப் பரிமாற்றம் தொடர்பான ஷரத்துகள் இல்லை. ஆனால், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்படி, இந்த விமானங்களின் உதிரிப் பாகங்களைத் தயாரிக்க இந்திய நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும். அந்த நிறுவனங்களை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமே தேர்ந்தெடுக்கலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் என மத்திய அரசு கூறியது. மேலும், அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் வகையில் இந்த விமானங்கள் வடிவமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லக் கூடிய மிராஜ்- 2000 ரக விமானம் மிக விரைவில் சேவையில் இருந்து நீக்கப்படவுள்ள நிலையில் இந்த விமானத்தின் அவசியம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

ஒப்பந்த சர்ச்சை: இந்த ரஃபேல் விமானங்களின் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் ரூ. 21,000 கோடிக்கான ஒப்பந்தத்தை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துக்கு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் வழங்கியது. இந்நிலையில், ஒப்பந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு சுமார் 10 நாள்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டதாகவும், இதற்கு மத்திய அரசு உதவியுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதற்கு, டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தாங்கள் விரும்பும் எந்த இந்திய நிறுவனங்களுக்கும் ஆர்டர்களை வழங்கலாம் என்பது ஒப்பந்தம்... அது அவர்களது உரிமை. இந்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை'' என்று மத்திய அரசு மறுத்தது.

எஸ்கேஐஎல் இன்ஃப்ரா ஸ்டிரக்சர் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக, 1997 ஆம் ஆண்டு பிபாவாவ் ஷிப்யார்டு (PIPAVAV SHIPYARD)  ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்திய கடற்படைக்கு போர்க் கப்பல்கள் உள்பட ராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டது. இந்த நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில் பங்குச் சந்தையில் 2009-இல் பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனத்தின் 17.66 சதவீதம் பங்குகள் ரிலையன்ஸ் நிறுவனத்தால் 2015, மார்ச் 5-இல் வாங்கப்பட்டது. 

படிப்படியாக இந்நிறுவனத்தின் 36.5 சதவீத பங்குகளை 2016, ஜனவரியில் ரிலையன்ஸ் வாங்கியது. இதைத் தொடர்ந்து, அனில் அம்பானி இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2016, மார்ச் 3-இல் பிபாவாவ் ஷிப்யார்டு நிறுவனம், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் அண்ட் என்ஜினீயரிங் எனப் பெயர் மாற்றப்பட்டது. 2017, செப்டம்பர் 6-இல் இந்த நிறுவனத்தின் பெயர் ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் லிமிடெட் என மீண்டும் பெயர் மாற்றப்பட்டது. அந்த நிறுவனத்துடன்தான் இப்போது ரஃபேல் விமானங்களுக்கான உதிரிபாகங்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

126 போர் விமானங்களை ரூ.54,000 கோடியில் கொள்முதல் செய்ய காங்கிரஸ் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இப்போது, ரூ.60,000 கோடியில் 36 விமானங்களை மட்டுமே வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால், இதில் பெரும் ஊழல் உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதற்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்தது.

'காங்கிரஸ் ஆட்சியின் போது விமானங்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட இருந்தன. அந்த விலை நிலவரம் விமானங்களின் விலைக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், புதிய ஒப்பந்தத்தில் அனைத்து நவீன போர்க் கருவிகளும் பொருத்தப்பட்டே புதிய விலை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, போர் கருவிகள் பொருத்தப்படாத விமானத்தின் விலையையும், போர்க் கருவிகள் பொருத்தப்பட்ட விமானத்தின் விலையையும் ஒப்பிடுவது தவறு' என மத்திய அரசு கூறுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரக் குழு அமைத்து இந்த ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இச்சூழ்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் இந்த ஒப்பந்தம் விவகாரம் பாஜகவுக்கு சவாலாக அமையுமா? காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் துருப்புச்சீட்டாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

காங்கிரஸ் கிடுக்கிப்பிடியும் அரசின் பதிலும்
இந்த ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தை தவிர்க்கக் காரணம் என்ன என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருக்கிறது. இந்தியாவில் தயாரிப்பு என்று கூறிவிட்டு, வெளிநாட்டுத் தயாரிப்புகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பது காங்கிரஸின் கேள்வி.

இனியாவது இந்திய அரசின் விமானம் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இருக்கும்போது, உதிரிபாகங்களைத் தயாரிக்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரூ.21,000 கோடிக்கான ஒப்பந்தம் ஏன் போடப்பட வேண்டும்? அதை இந்திய அரசு நிறுவனத்துக்கு ஏன் பெற்றுத்தரவில்லை என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வி. 
காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவிருந்த முந்தைய ஒப்பந்தத்தின்படி, 118 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட இருந்தன. இதனால், ஹெஏஎல் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஆனால் புதிய ஒப்பந்தப்படி பறப்பதற்கு தயார் நிலையில் உள்ள விமானங்கள் கொள்முதல் செய்யப்படுவதால் ஹெஏஎல் நிறுவனத்தின் பங்களிப்புத் தேவை ஏற்படவில்லை' என்கிறது மத்திய அரசு. விமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் உரிமை பிரான்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது என்றும் அதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசின் முடிவை இந்திய விமானப்படை தளபதியும் ஆதரித்திருக்கிறார்.

ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும்போது, உதிரிபாகங்களை எங்கள் அரசு நிறுவனங்கள் வழங்கும் என்று அரசு ஏன் நிபந்தனை விதிக்கவில்லை? மறைமுகமாக அனில் அம்பானிக்கு உதவுவதற்காகத்தான் இந்த ஒப்பந்தமா என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் ஐயப்பாடு. 

ரஃபேல் விமானத்தின் சிறப்பு என்ன?

பிரான்ஸ் நாட்டின் 'டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அதி நவீன வசதிகளைக் கொண்ட போர் விமானமே ரஃபேல்! ரஃபேல் என்பதை 'நெருப்பின் வெடிப்பு' எனத் தமிழ்ப்படுத்தலாம். இந்த விமானத்தை வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் இலக்குகளை மிகத் துல்லியமாக கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்க முடியும். அதி நவீன ரேடார் வசதிகளைக் கொண்டஇந்த விமானத்தை அவ்வளவு எளிதாக சுட்டு வீழ்த்திவிட முடியாது. கடும் குளிர் நிலவும் காஷ்மீரின் லே' போன்ற மலை உச்சிகளில் அமைந்துள்ள விமான தளங்களில் இருந்துகூட இந்த விமானத்தை இயக்க முடியும். 

மேலும், இந்த விமானம் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் தொழில் நுட்பம் கொண்டது. குரல் வழி உத்தரவுகளைக் கொண்டே இதை இயக்கலாம் என்பன போன்ற பல நல்ல அம்சங்கள் உள்ளன. ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் போன்ற நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்த விமானம் பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளது. 

மத்திய அரசு சறுக்கிய இடங்கள்..!

1 .ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறுகிறது. இது இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகளின் கூறும் குற்றச்சாட்டை வலுப்படுத்துவதாக நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், ரூ. 60,000 கோடி வரிப்பணம் தொடர்பாக கேள்வி கேட்கும் உரிமை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளுக்கு இல்லையா எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

2 .தேசப் பாதுகாப்பு கருதி ரஃபேல் விமானத்தின் முழுமையான விலை விவரத்தை வெளியிட முடியாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறும் விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என சில பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

3 .ராணுவ தளவாட ஒப்பந்தங்கள் பெரும்பாலானவை ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலானவை. போஃபர்ஸ் பீரங்கி ஊழலுக்குப் பிறகு அனைத்து பிரம்மாண்ட ராணுவ ஒப்பந்தங்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வழக்கம் தற்போது உள்ளது. இந்நிலையில், வெளிப்படைத் தன்மையின்றி அவசர கதியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பெரும் வாய்ப்பை கொடுத்துவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

4 .அனில் அம்பானி பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர். இவரது நிறுவனம் பல சர்ச்சைகளைச் சந்தித்ததாகும். பிரதமர் மோடியின் 2015, ஏப்ரல் பிரான்ஸ் விஜயத்தில் இவரும் பங்கு கொண்டார். இதுதான் சர்ச்சைக்கு முக்கியக் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

5. 2005-இல் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்ட போது எதிர்க்கட்சிகளின் சந்தேகங்களுக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்தார்; அதேபோல, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை அழைத்து விளக்கம் அளிப்பது மத்திய அரசின் கடமை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com