கேரள வெள்ள பாதிப்பு: மத்திய குழு இன்று ஆய்வு

கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதத்தை மதிப்பிட மத்திய குழு வெள்ளிக்கிழமை செல்கிறது.


கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதத்தை மதிப்பிட மத்திய குழு வெள்ளிக்கிழமை செல்கிறது.
உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலர் பி.ஆர்.சர்மா தலைமையிலான மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான 11 பேர் கொண்ட குழு கேரளத்தில் வெள்ளிக்கிழமை சேத மதிப்பை கணக்கிடும் பணியைத் தொடங்குகிறது.
இந்தக் குழு வரும் 24-ஆம் தேதி வரை அந்த மாநிலத்தில் இருந்து இப்பணியை மேற்கொள்ளும்.
கூடுதல் தலைமைச் செயலர் பி.ஹெச்.குரியன், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர், மத்திய குழுவிடம் சேத விவரங்களை தெரிவிப்பார்கள்.
24-ஆம் தேதி தில்லி திரும்புவதற்கு முன்பு, கேரள முதல்வர் பினராயி விஜயனுடனும் மத்திய குழு ஆலோசனை நடத்தவுள்ளது.
கேரளத்துக்கு ரூ.600 கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் ரூ.562.45 கோடி ஏற்கெனவே உள்ளது.
மழை வெள்ளத்தில் சுமார் 493 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர்.
இதுவரை 5.52 லட்சம் பேருக்கு நிவாரணத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் கேரளம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ரூ.40,000 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. ரூ.4,700 கோடி இழப்பீடு அளிக்குமாறு மத்திய அரசிடம் கேரளம் கோரியது.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.10,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அளித்த வாக்குறுதி வரும் 29-ஆம் தேதிக்கு நிறைவேற்றப்படும் என்று
அந்த மாநில தொழிலகத் துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் கூறினார்.
முன்னதாக, இவர் தலைமையில் அமைச்சரவை துணைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com