ஊழல் குற்றச்சாட்டு: பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பதிலடி

ஒடிஸா அரசு மீதான பிரதமர் நரேந்திர மோடியின் ஊழல் குற்றச்சாட்டுக்கு அம்மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு: பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பதிலடி

ஒடிஸா அரசு மீதான பிரதமர் நரேந்திர மோடியின் ஊழல் குற்றச்சாட்டுக்கு அம்மாநில முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து புவனேசுவரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

"ஒடிஸா அரசு மீதான பிரதமர் மோடியின் ஊழல் குற்றச்சாட்டை மறுக்கிறேன். பாஜக தொண்டர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இதை அவர் தெரிவித்திருக்கலாம்.

அதேநேரத்தில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டம், உஜ்வாலா திட்டம் ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

இதேபோல், நாட்டில் தற்போது பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் நாட்டு மக்கள் பெரும் துன்பத்தில் உள்ளனர். இதை மத்திய அரசு தீவிர பிரச்னையாக கருத வேண்டும். 

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒடிஸா சேரவில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்தத் திட்டத்தைக் காட்டிலும், ஒடிஸா அரசு கொண்டு வந்துள்ள திட்டம் அதிகம் பயனுடையது ஆகும். இந்தத் திட்டத்தால், ஒடிஸா மக்கள் 50 லட்சம் பேர் பயனடைவர். 

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பெண்களுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைக் காட்டிலும் அதிகமாக, ஒடிஸா அரசின் திட்டத்தில் ரூ.7 லட்சம் கொடுக்கப்படுகிறது. 

ஒடிஸா அரசின் உணவு பாதுகாப்புத் திட்டத்தில் 25 லட்சம் ஏழை மக்கள் பயனடைவர்" என்றார் நவீன் பட்நாயக்.

ஒடிஸா மாநிலம், தால்சேர், ஜார்சுகுடா ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஒடிஸாவை ஆளும் பிஜு ஜனதா தளம் அரசை விமர்சித்தார். அவர் கூறுகையில், "சதவீத கமிஷன் கலாசாரமும், முடிவெடுப்பதில் காலதாமதமும் ஒடிஸா அரசின் அடையாளமாக உள்ளது. இதனால் வளர்ச்சியில் ஒடிஸா பின்தங்கியுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com