இந்தியா

இந்தியா-பாக். வெளியுறவு அமைச்சர்கள் பேச்சு ரத்து

DIN


இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையே அடுத்த வாரம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் மூலம் வியாழக்கிழமை விடுத்த கோரிக்கையை ஏற்று, நியூயார்க்கில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேச மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. 
அதன்படி, அடுத்த வாரம் ஐ.நா. சபைக் கூட்டத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்தூம் மஹ்முத் குரேஷியும் சந்தித்துப் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 3 போலீஸார் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாலும், இந்திய பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியை புகழும் வகையில் பாகிஸ்தான் அரசு அஞ்சல் தலை வெளியிட்டதை அடுத்தும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகம் விளக்கம்: இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் 3 போலீஸாரை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். மேலும், பயங்கரவாதத்தையும், பயங்கரவாதிகளையும் புகழும் வண்ணம் 20 அஞ்சல் தலைகளை பாகிஸ்தான் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவது என்பது அர்த்தமற்றதாகவே அமையும். பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்பது இதில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. பாகிஸ்தான் பிரதமரின் கருத்தை ஏற்று, வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுக்கு இந்தியா சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், அந்தநாடு இந்த அளவுக்கு மோசமாக நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது.
பாகிஸ்தான் மாறவில்லை: பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எழுதிய கடிதத்தை, அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சி என்று இந்தியா ஏற்று, பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. ஆனால், இப்போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று கூறிவிட்டு, மறுபுறம் பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதை பாகிஸ்தான் தொடர்ந்து வருகிறது. அங்கு ஆட்சி மாறியபோதும் இதுபோன்ற செயல்பாடுகள் மாறவில்லை.
இம்ரான் கான், குரேஷி ஆகியோர் தனித்தனியாக எழுதிய கடிதங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே இந்தியா நடந்து கொண்டது. எனவே தான் அவர்கள் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்தியாவின் நம்பிக்கையை பாகிஸ்தான் ஒருநாள் கூட காப்பாற்றவில்லை என்று கூறியுள்ளார்.
இம்ரான் கானின் கடிதம்: முன்னதாக, இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை நிலைநாட்டுவதற்கான பெருங்கனவை நிஜமாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான முன்னோட்டமாக இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் நடைபெறும் சார்க்' அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் அவர்கள் இருவரும் கலந்து கொள்ள உள்ளனர். 
ஆனால், அதற்கு முன்னதாக நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்திலேயே அவர்கள் சந்தித்து பேச வேண்டும் என விழைகிறேன். 
இது, இரு நாட்டு நல்லுறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இருக்கும்' என்று தெரிவித்திருந்தார். இதையடுத்தே பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒப்புக் கொண்டது.

அரசியல் நோக்கங்களே காரணம்: பாகிஸ்தான்


பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்ததற்கு வேறு உள்நாட்டு அரசியல் காரணங்களும், நோக்கங்களும் உள்ளன என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் குரேஷி கூறியதாக, எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்தது ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அரசின் இந்த நடவடிக்கை துரதிருஷ்டவசமானது. 
அமைதியை ஏற்படுத்துவதற்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பை இந்தியா வீணடித்துவிட்டது. தங்கள் நாட்டில் உள்ள சில அரசியல் நெருக்கடி காரணமாகவே அவர்கள் பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது. 
ஏனெனில், இந்தியாவில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு ஆளும் தரப்பு தயாராகி வருகிறது. பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்துவதைவிடவும் முக்கியமான உள்நாட்டு அரசியல் காரணங்களும், நோக்கங்களும் அவர்களுக்கு உள்ளன. மேலும், இந்தியாவில் உள்ள ஒரு பிரிவினருக்கு பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதில் விருப்பம் கிடையாது. இந்த விஷயத்தை உலக நாடுகள் கவனிக்க வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முன்வந்தபோதும், இந்தியா அதனை நிராகரித்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT