காவலர்கள் கொலை: புல்வாமா, சோபியான் மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை

காவலர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்டதையடுத்து, புல்வாமா மற்றும் சோபியான் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சோபியானில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் சக அதிகாரிகள்.
சோபியானில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் சக அதிகாரிகள்.


ஸ்ரீநகர்: காவலர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்டதையடுத்து, புல்வாமா மற்றும் சோபியான் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

புல்வாமா மற்றும் சோபியான் மாவட்டங்களில் 8 கிராமங்களில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ராணுவம், காவல்துறை, சிஆர்பிஎஃப் வீரர்கள் அடங்கிய கூட்டுக் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் 2 காவல்துறை அதிகாரிகள் மற்றுமொரு காவலரை பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கடத்திச் சென்று, பின்னர் கொலை செய்தனர். மூவரின் உடல்களும் தோட்டப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டன.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தினரால் நடத்தப்படுவதாகக் கூறப்படும் டுவிட்டர் பக்கத்தில், காவல்துறை அதிகாரிகளின் கொலைக்கு பொறுப்பேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கு ஹிஸ்புல் இயக்கத்தினரே காரணம் என பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் சந்தேகிக்கின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காவல்துறை பணியாளர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தளபதி ரியாஸ் நைகூ, பல்வேறு சமயங்களில் மிரட்டல் விடுத்து வந்தார். குறிப்பாக, சிறப்பு காவல் அதிகாரிகள் (எஸ்பிஓ) பதவி விலக வேண்டும் என்பது அவரது பிரதான நிபந்தனையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத் தலைவர் சையது சலாஹுதீனுடைய இரண்டாவது மகனை, பயங்கரவாத செயல்களுக்காக நிதியுதவி பெற்றதாக குற்றம்சாட்டி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த மாதம் 30-ஆம் தேதி கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் துறையில் பணியாற்றும் 8 நபர்களுடைய உறவினர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மீண்டும் கடத்தல்: அந்த சம்பவம் நடந்து, மூன்று வாரங்களே ஆகியுள்ள நிலையில், சோபியான் மாவட்டம், படாகுண்ட் மற்றும் காப்ரான் கிராமங்களில் இருந்து சிறப்பு காவல் அதிகாரிகள் பிர்தோஸ் அஹமது, குல்வந்த் சிங் மற்றும் காவலர் நிசார் அஹமது ஆகியோரை பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கடத்தினர்.

கிராம மக்கள் பயங்கரவாதிகளை சூழ்ந்து கொண்டு, அந்த மூவரையும் விடுவிக்குமாறு கெஞ்சியபோது, பயங்கரவாதிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட மூவரையும் அவர்கள் கடத்திச் சென்றனர்.

இதற்கிடையே, பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் அந்த மூவரும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தோட்டப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com