கேரளம்: கைதான பேராயர் ஃபிராங்கோ சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து திரும்பினார்

கேரளத்தில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேராயர் ஃபிராங்கோ முலக்கல் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 
கேரளம்: கைதான பேராயர் ஃபிராங்கோ சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து திரும்பினார்

கேரளத்தில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேராயர் ஃபிராங்கோ முலக்கல் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட நிலையில், தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறிய ஃபிராங்கோ கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபை பேராயராக இருந்த ஃபிராங்கோ, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் கேரள காவல்துறையினர் கடந்த ஜூன் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இதனிடையே, தனது செல்வாக்கு, பண பலத்தை பயன்படுத்தி, வழக்கிலிருந்து தப்பிக்க ஃபிராங்கோ முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய கன்னியாஸ்திரி, இதுதொடர்பாக வாடிகனுக்கான இந்தியத் தூதருக்கு கடிதம் எழுதினார். இந்த விவகாரம் கேரளம் மட்டுமன்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஜலந்தர் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் பொறுப்பில் இருந்து ஃபிராங்கோ தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் புதன், வியாழன் ஆகிய இரு தினங்களாக விசாரணை நடத்திய நிலையில், வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக விசாரணை நீடித்தது. கொச்சியிலுள்ள குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர், வெள்ளிக்கிழமை இரவு ஃபிராங்கோ கைது செய்யப்பட்டார். அவர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கோட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி சங்கர் தெரிவித்தார்.

போராட்டம் தொடரும்: முன்னதாக, ஃபிராங்கோவை கைது செய்ய வலியுறுத்தி, கொச்சி உயர் நீதிமன்றம் அருகே கன்னியாஸ்திரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர்கள், ஃபிராங்கோவுக்கு தக்க தண்டனை கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர். 

அமைச்சர் உறுதி: இதனிடையே, மாநில தொழில் துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவே மாநில அரசு உள்ளது. இந்த விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்து வருகிறது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com