ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை  தேர்வு செய்தது யார்? பிரான்ஸ் நிறுவனம் விளக்கம்

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தாங்களே தேர்வு செய்து கொண்டதாக பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய விமானக் கட்டுமான நிறுவனமான டஸால்ட் அவியேஷன் விளக்கம் அளித்துள்ளது.
ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை  தேர்வு செய்தது யார்? பிரான்ஸ் நிறுவனம் விளக்கம்


புது தில்லி: ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தாங்களே தேர்வு செய்து கொண்டதாக பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய விமானக் கட்டுமான நிறுவனமான டஸால்ட் அவியேஷன் விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் கூறியிருப்பதாக வெளியான தகவலில், ரஃபேல் ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடட் நிறுவனத்தை இந்திய அரசே பரிந்துரைத்ததாகக் கூறியிருந்தார்.

ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் தற்போது பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் அவியேஷன் அளித்திருக்கும் விளக்கத்தில், ரஃபேல் போர் விமானம் தொடர்பாக மட்டுமே இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், பிரான்ஸ் நிறுவனம்,  தாங்கள் கூட்டு வைத்துக் கொள்ளும் நிறுவனத்தை தேர்வு செய்வதில் இந்திய அரசு எந்த தலையீட்டையும் செய்யவில்லை. கூட்டு நிறுவனத்தை நாங்களே தேர்வு செய்து ஒப்புதலுக்காக அனுப்பும் சுதந்திரம் தங்களிடமே இருந்ததாகவும், தாங்களே ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடட் நிறுவனத்தை தேர்வு செய்து இந்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டாளியாக இருக்க வேண்டும் என இந்திய அரசு பரிந்துரைத்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் தெரிவித்துள்ளார்.

36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. எனினும், விமானங்களின் உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்றும், இதற்கான கூட்டாளியை டஸால்ட் நிறுவனமே தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ரஃபேல் போர் விமான தயாரிப்பில், பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துக்கு பதிலாக தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் டிஃபன்ஸ்' பலனடைய வேண்டும் என்ற நோக்கில் அந்நிறுவனத்தை டஸால்ட் நிறுவனத்துடன் கூட்டாளி ஆக்கியது பிரதமர் மோடிதான் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்தின் கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரான்ஸ் நாளிதழ்களில் பிராங்சுவா ஹொலாந்த் கூறியதாக வெளியான செய்தியில், ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தத் தகவலை நாங்கள் சொல்லவில்லை. அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தை போர் விமான உதிரி பாகங்களை தயாரிக்க டஸால்ட் நிறுவனத்துடன் கூட்டாளியாக்குமாறு இந்திய அரசு பரிந்துரைத்தது. எங்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எங்களுக்கு அளிக்கப்பட்ட நிறுவனத்தைதானே நாங்கள் தேர்வு செய்ய முடியும். எனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தை விமான தயாரிப்பில் பங்கேற்க செய்தோம்' என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிராங்சுவா ஹொலாந்தின் கருத்து மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

மத்தியப் பாதுகாப்புத் துறை விளக்கம்: ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்ததில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும்  இல்லை.  பிரான்ஸ் முன்னாள் அதிபரின் கருத்தை தாங்கி வந்துள்ள ஊடக செய்திகள் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும், டிஸால்ட் அவியேஷனும் கூட்டுசேர்ந்தது முழுக்க முழுக்க இவ்விரு நிறுவனங்களுக்கிடையே உருவான வர்த்தக ரீதியிலான ஒத்துழைப்பாகும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு பிரான்ஸுடன் ரூ.58,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக கடந்த 2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் 10-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com