ரஃபேல்: ரிலையன்ஸ் எங்கள் தேர்வு: பிரான்ஸின் "டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தகவல்

ரஃபேல் போர் விமானங்களின் உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது தாங்கள்தான் என்று
ரஃபேல்: ரிலையன்ஸ் எங்கள் தேர்வு: பிரான்ஸின் "டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தகவல்

ரஃபேல் போர் விமானங்களின் உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது தாங்கள்தான் என்று பிரான்ஸைச் சேர்ந்த "டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
 உரிய விதிகளுக்கு உட்பட்டு அதுதொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
 இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இத்தகைய விளக்கத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து வரும் கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இது அமைந்துள்ளது.
 பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, அந்நாட்டின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான டஸால்ட் ஏவியேஷன் லிமிடெட்டிடம் இருந்து அவற்றை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
 இதனிடையே, ரஃபேல் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
 இது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது. பிரதமருக்கு நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
 இந்நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலாந்த், நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு இந்தியாதான் பரிந்துரைத்தது' என்றார். தங்களுக்கு வேறு எந்த வாய்ப்பும் வழங்கப்படாததால், அந்நிறுவனத்துடன் உடன்படிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானது எனவும் அவர் கூறினார்.
 இந்தக் கருத்து சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. இதை முன்னிறுத்தி பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தச் சூழலில், டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் சார்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
 ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பாதுகாப்புத் தளவாட கொள்முதல் நடவடிக்கை விதிகள் 2016-இன் படியே மேற்கொள்ளப்பட்டது. "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் அந்நிறுவனத்துடன் சில உடன்படிக்கைகளை செய்து கொள்ள நாங்கள் திட்டமிட்டோம். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அந்த வாய்ப்பை வழங்கியது எங்களுடைய முடிவுதான் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
 பன்னாட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அனைத்தையும் நாங்கள் வழங்கியிருக்கிறோம். அந்த அடிப்படையிலேயே டஸால்ட் நிறுவனம், இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சில ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையில் பிரான்ஸ் அரசின் தலையீடு எதுவும் இல்லை. இதுவரையிலும் சரி; இனிமேலும் சரி, அதே நிலைப்பாட்டில்தான் பிரான்ஸ் அரசு இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதேபோன்று மத்திய அரசு சார்பிலும் சில விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக வேண்டுமென்றே தேவையற்ற சர்ச்சைகள் எழுப்பப்படுவதாகவும், டஸால்ட் - ரிலையன்ஸ் ஒப்பந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மெளனம் காப்பது ஏன்?

ரஃபேல் முறைகேடு குறித்து பதில் அளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி மெளனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
 பிரதமர் மோடி ஏன் மெüனமாக இருக்கிறார்? இது பாதுகாப்பு சார்ந்த விஷயம். பிரதமர் ஊழல்வாதி என நாங்கள் உறுதியாக கூறுகிறோம். இனி அவர்தான் பதில் அளிக்க வேண்டும்.
 பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலந்தின் கருத்து உண்மை என்று மோடி ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது அவர் பொய் சொல்கிறார் என தெரிவிக்க வேண்டும்.
 ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு 12 நாள்களுக்கு முன்புதான் அம்பானியின் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அவர்கள் ஒப்பந்தத்தை பறித்துக் கொண்டனர் என்றார் ராகுல் காந்தி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com